
ஜனாதிபதியை இலக்கு வைத்து ஏதேனும் ஒரு தீர்மானத்தை எடுப்பதற்காகப் பாதாள உலகத் தலைவர்கள் சிலர் மடகாஸ்கரில் ரகசிய பேச்சுவார்த்தையொன்றை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊடகவியலாளர் கயான் காலகே இதனை தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் கடுமையான பாதாள உலக மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தற்போதைய அரசாங்கத்தினால் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை ஒடுக்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள கடுமையான நடவடிக்கைகள் காரணமாக தங்களது சட்டவிரோத வலையமைப்பு முழுமையாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே இந்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
எங்களது புலனாய்வுகளின்படி, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தப் பாதாள உலகக் குழுக்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒன்று கூடி ஜனாதிபதி தொடர்பாக ஏதேனும் ஒரு முடிவை எடுக்கப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக மடகாஸ்கரில் இவ்வாறானதொரு கலந்துரையாடல் நடந்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இது வெறும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பானது மட்டுமல்ல ஒட்டுமொத்த குற்றவியல் வலையமைப்பும் வீழ்ச்சியடைவதால் ஏற்பட்டுள்ள ஒரு பின்னணியாகும்.
இந்தச் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு உளவுத்துறையினர் (Intelligence Agencies) வழங்கிய விபரங்களின் அடிப்படையில் ஜனாதிபதியின் பாதுகாப்பை உச்சக்கட்டத்திற்கு உயர்த்துவதற்கு பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள இந்த கடுமையான அச்சுறுத்தல் பொதுமக்களுக்குப் வெளிப்புறமாகத் தெரியாவிட்டாலும் இதன் பின்னணியில் மிகவும் ஆபத்தானதொரு நிலைமை நிலவுகின்றது.
நாடாளுமன்றத்திற்குள் இருக்கும் அரசியல் எதிரிகளை விட மிகவும் ஆபத்தான குழுவினரே இந்தச் சதியின் பின்னணியில் இருக்கின்றனர்.
நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களை சீர்குலைப்பதே இவர்களின் முதன்மை நோக்கம்” என அவர் தெரிவித்துள்ளார்.
No comments: