News Just In

1/29/2026 06:05:00 AM

சம்மாந்துறையில் ‘புன்னகைப் பூங்கா’ வாய் சுகாதாரக் கண்காட்சி!

சம்மாந்துறையில் ‘புன்னகைப் பூங்கா’ வாய் சுகாதாரக் கண்காட்சி!


நூருல் ஹுதா உமர்

பாடசாலை மற்றும் முன்பள்ளி மாணவர்களிடையே வாய் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘புன்னகைப் பூங்கா’ வாய் சுகாதாரம் தொடர்பான கண்காட்சி இன்று (28) சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.நௌஷாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கண்காட்சிக் கூடத்தைத் திறந்து வைத்தார்.

இக்கண்காட்சியில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பயனுள்ள வகையில் பல்வேறு விழிப்புணர்வு கூடங்கள் அமைக்கப்பட்டிருந்ததுடன், வாய்ப்புற்று நோய் மற்றும் முரசு நோய்கள், பற்சூத்தை மற்றும் முன்பிள்ளைப் பருவ பற்சூத்தை, சீரற்ற பல் வரிசை மற்றும் பல் உடைவுத் தடுப்பு முறைகள், வாய் ஆரோக்கியத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் இடையிலான தொடர்பு போன்ற விடயங்கள் குறித்து சுகாதாரத்துறையினரால் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, பிராந்திய வாய் சுகாதாரப் பிரிவுப் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் யூ.ஹபீப் முகம்மட், பிராந்திய தொற்றா நோய் தடுப்புப் பிரிவுப் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எஸ்.எம்.பௌஸாத், சம்மாந்துறை மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஐ.எல்.ஜலால்டீன், சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதிபர் ஏ.ஆர்.எம்.உவைஸ் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.

சம்மாந்துறை கோட்டக்கல்வி அதிகாரி எம்.ரீ.ஜனுபர், பிரதேச சபை செயலாளர் யூ.எல்.அப்துல் மஜீட், பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லாபீர் உள்ளிட்ட சுகாதாரத் திணைக்கள உத்தியோத்தர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பெற்றோர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments: