.jpeg)
மட்டக்களப்பு - தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தொல்பொருள் பதாகையை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் அகற்றாவிட்டால் தொல்பொருள் திணைக்களத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேசசபையின் தவிசாளர் இ.திரேசகுமாரன் தெரிவித்தார்.
மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேசசபையின் எந்தவித அனுமதியும் பெறப்படாமல் குறித்த பெயர்ப்பலகை நிறுவப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்திற்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று பிரதேசபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட தாந்தாமலை கிராமத்திலே அமைந்திருக்கின்ற எங்களுடைய பாரம்பரியமான இந்துமதத்தை பேணி பாதுகாக்கின்ற வழிபாட்டுத்தலமான முருகன் ஆலயத்தில் நேற்றைய தினம் யாருக்கும் தெரியாமல் கள்ளத்தனமாக வந்து தொல்பொருள் திணைக்களம் தொல்பொருள் இடம் என்ற பெயர்ப்பலகையை மாட்டிவிட்டு சென்றிருக்கின்றார்கள்.
இந்த பிரதேசத்திலே பிரதேச சபையின் அனுமதி எடுத்த பின்பு தான் ஒரு பெயர் பலகை மாற்றலாம்.
99 வீதம் இந்து மத மக்கள் வாழுகின்ற ஒரு இடமாக இந்த பிரதேசம் காணப்படுகின்றது.
ஆகவே இவ்வாறான ஒரு நயவஞ்சக வேலையை அவர்கள் செய்யக்கூடாது.
உண்மையாகவே ஒரு திணைக்களமாக நாங்கள் இதனை பார்க்கவில்லை. பௌத்த மதத்தினுடைய கொள்கைகளை பரப்புகின்ற ஒரு திணைக்களமாகத்தான் நாங்கள் அதை பார்க்கின்றோம்.
உடனடியாக அவர்கள் அந்த பெயர் பலகையை அகற்ற வேண்டும் அவ்வாறு அகற்றாத பட்சத்தில் மக்கள் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்துள்ளார்.
No comments: