தடுப்பூசி பற்றிய சந்தேகங்களை நீக்கி தடுப்பு மருந்தேற்றல் நடவடிக்கை : துறை சார்ந்தவர்களுக்கு பயிற்சி செயலமர்வு
நூருல் ஹுதா உமர்
கல்முனை பிராந்தியத்தில் தடுப்பூசி ஏற்றுவதற்கு தயங்குகின்ற மற்றும் மறுக்கின்ற குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதையடுத்து தடுப்பூசி பற்றிய தவறான சந்தேகங்களை நீக்குவதற்கும் தடுப்பூசியின் அவசியம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கு பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவு திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில் கல்முனை பிராந்தியத்தில் தடுப்பூசி ஏற்றுவதற்கு தயங்குகின்ற மற்றும் மறுக்கின்றவர்களை சுகாதார ரீதியாகவும் மத ரீதியாகவும் தெளிவூட்டி தொற்று நோய்களுக்கு முன்கூட்டியே சிகிச்சை பெறுவதன் அவசியத்தையும் வலியுறுத்துவதற்காக துறை சார்ந்தவர்களுக்கு பயிற்சியளிக்கும் செயலமர்வொன்று சனிக்கிழமை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலுக்கமைவாக, கல்முனைப் பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவு ஒருங்கிணைப்பு செய்த குறித்த செயலமர்வு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்தியர்களான டொக்டர் எம்.எச்.றிஸ்பின். டொக்டர் எம்.ஐ.றிஸ்னீன் முத், சுகாதார வைத்திய அதிகாரிகள், ஜம்மியத்துல் உலமா சபையின் கல்முனை கிளை முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட உலமாக்கள், மேற்பார்வை பொது சுகாதார உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தொற்று நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.றிஸ்பின், சுகாதார வைத்திய அதிகாரிகளான டொக்டர் எம்.எம்.நௌசாத், டாக்டர் ஏ.எம்.முனவ்வர். டாக்டர் ஏ.எல்.அலாவுதீன், டொக்டர் ஐ.எம்.முஜீப், டொக்டர் என்.ரமேஷ், டாக்டர் திருமதி எஸ்.எம்.இஸட். சராப்டீன், டாக்டர் திருமதி எஸ்.ஜீவா ஆகியோர் இச்செயலமர்வில் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
தடுப்பூசியின் அவசியம், தடுப்பு மருந்தேற்றல் நடவடிக்கையின் போது எதிர்கொள்ளும் சவால்கள், தடுப்பூசி பற்றி பொதுமக்கள் மத்தியில் காணப்படும் சந்தேகங்கள், தடுப்பு மருந்து ஏற்றாமையினால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டு அவற்றுக்கு விஞ்ஞான மற்றும் தர்க்கரீதியாக விளக்கமளிக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்கள் தங்களுடைய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பயிற்சி பட்டறைகளை நடத்தி தடுப்பூசி ஏற்றுவது தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் காணப்படும் சந்தேகங்களை தெளிவுபடுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
No comments: