News Just In

4/04/2025 11:27:00 AM

பாடசாலை மாணவி மீது கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் ; மாணவர்கள் உட்பட ஏழு பேர் கைது!

பாடசாலை மாணவி மீது கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் ; மாணவர்கள் உட்பட ஏழு பேர் கைது



பாடசாலை மாணவி ஒருவரை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 5 மாணவர்கள் உட்பட ஏழு பேர் ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான மாணவியின் காதலனும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த மாணவி மேலதிக வகுப்புக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு தனது காதலனுடன் வெளியே சென்றுள்ளார்.

இதன்போது சந்தேக நபரான காதலன் மாணவியை ஏமாற்றி ஹோமாகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான மாணவியின் பெற்றோரால் ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான மாணவி பரிசோதனைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: