இன்று அதிக அடக்குமுறைகளை கொண்ட தொழிற்துறையாக பெருந்தோட்ட துறை காணப்படுகின்றது. அவர்களுக்கான நீதி கிடைக்குமா.?
பாராளுமன்றத்தில் 04.03.2025.
இந்த விவாதத்தில் சகோதரர் ஜீவன் தொண்டமான் அவர்கள் இன்று பேசுவதற்கு இருந்த போதிலும் நேற்று மாலை ஹட்டன் செனன் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 23 குடும்பங்கள் 90இற்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டமை காரணமாக அவருக்கு இன்று சபைக்கு சமூகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் அவருடைய சார்பில் ஓரிரு வார்த்தைகளை கூறுமாறு குறிப்பிட்டிருந்தார். அதிலே அவருடைய உரையின் ஒருசில பகுதியை வாசித்து எனது கருத்திற்கு செல்லலாம் என நினைக்கின்றேன்.
பெருந்தோட்ட மலையக மக்கள் கடந்த 200 வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டிற்கு பெரும் சேவையை தமது உழைப்பின் மூலமாக வழங்கி வருகின்றனர். ஆனால் அவர்கள் அவ்வாறு நாட்டின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பாக உழைத்த போதும், அவர்களின் வாழ்க்கைத் தரம், சமூக அந்தஸ்து மற்றும் அடிப்படை உரிமைகளை வழங்குவதில் இந்த நாடு பாரபட்சமாக இருந்து வருகின்றது. எமது சமூகத்தின் கோரிக்கைகளை சாதகமாக பரிசீலனை செய்வதற்கு பதிலாக எப்படி தட்டிக்கழிக்கலாம் என்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. இன்றுவரை அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இதிலே ஒரு நீண்ட உரையை அவர் அனுப்பி இருக்கிறார். ஆனால் நேரத்தை கருத்தில் கொண்டு எனது கருத்திற்கு செல்கிறேன்.
மிக முக்கியமாக தொழிற்சங்கங்களுடைய காவலான கடந்த காலங்களில் செயற்பட்ட கௌரவ வசந்த சமரசிங்க அமைச்சர் இந்த சபையில் இருக்கின்றமையால், கௌரவ அமைச்சர் அவர்களே உங்களுக்கு தெரியும் கடந்த காலத்தில் தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் 1000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் இதனை 1700 ரூபாயாக அதிகரிக்க பாரிய முயற்சி எடுக்கப்பட்டது. அதில் பெருந்தோட்ட கம்பனிகள் இந்த தொகையை அதிகரிக்க இணங்காதமை காரணமாக அவர்கள் நீதிமன்றத்தை நாடி இருந்தார்கள். அதனை தொடர்ந்து அந்த வர்த்தமானியை இரத்து செய்து 2024ஆம் ஆண்டு மீண்டும் சம்பள நிர்ணய சபையின் ஊடாக மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். அந்த நேரத்த்தில் கௌரவ அமைச்சர் அவர்களே உங்களுடைய கட்சியினுடைய தொழிற்சங்கத்தின் ஊடாக 2136 ரூபாய் நான் கூறுவது சரியா? 2136 ரூபாயா அல்லது 2163 ரூபாயா உங்களது தொழிற்சங்கத்தின் ஊடாக முன்மொழியப்பட்டது? இரண்டு தொகைகளில் ஒன்று.
தற்போதைய தேசிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கமான அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம். இது உங்களுடைய தோட்ட தொழிலாளர்களுக்கான சங்கம். 2136 ரூபாய் உயர்வை தவிர வேறு எதற்கு நாம் இணங்கமாட்டோம் என உங்களது சங்கத்தின் சார்பில் கடந்த காலங்களில் கூறப்பட்டது. ஆனால் இன்று ஜனாதிபதியின் உரையில் 1700 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் உங்களுக்கு தெரியும் 1350 ரூபாய் அடிப்படை சம்பளமாகவும் 350 ரூபாயை ஒரு கொடுப்பனவாக வழங்குவதற்கே பாரிய எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனால் தற்போது உங்களது வரவுசெலவு திட்டத்தில் 1700 ரூபாய் தான் கூறப்பட்டுள்ளது. அப்படி என்றால் நீங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் நீங்கள் இருந்த நிலைப்பாட்டிற்கும் இன்று இந்த நிலைப்பாட்டிற்கும் இடையே எவ்வாறு வித்தியாசம் ஏற்பட்டது?
மலையக மக்கள் இந்த அரசாங்கத்தை நம்பி வாக்களித்து இருக்கிறார். இந்த அரசாங்கத்தை நம்பி வாக்களித்திருப்பினும் இந்த அரசாங்கம் இம்மக்களை மீண்டும் ஏமாற்றுகின்றது. இதுவொரு ஏற்றுக் கொள்ள முடியாத விடயம். அரச ஊழியர்களை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் சம்பள உயர்வை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் விடயத்தில் ஆகக்குறைந்தது 1700 ரூபாய் சம்பளத்தை பற்றி கூட ஏன் அந்த விளக்கத்தை வழங்கவில்லை? இன்று தோட்ட தொழிலாளர் மக்களின் வாக்குகளை இந்த 159 என்ற எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு மாத்திரமே பயன்படுத்துகின்றீர்கள் என்பது மிகத் தெளிவாக விளங்குகிறது. வர்த்தகர்களுக்கு உதவி புரிகின்ற நடவடிக்கையைதான் நீங்களும் முன்னெடுக்கின்றீர்கள். இதனை மிகவும் கவலையான விடயமாகவே நான் நோக்குகின்றேன். இந்த மக்கள் உங்களுக்கு தெரியும் இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும், அந்நிய செலாவணியை கொண்டு வருவதற்கும் கடுமையாக பாடுபடும் இனம் தான் எம்முடைய மலையக மக்கள். இந்த மக்களுடைய அடிப்படை தேவைக்கு நீங்களும் துணை நிற்காது இருப்பது மிகவும் கவலை தரும் விடயம். அந்தவகையில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது உங்களுக்கு வாக்களித்து இந்த சபைக்கு அனுப்பிய இந்த மக்களே உங்களை விரட்டி அடிப்பார்கள். நீங்கள் மலையகத்தை இழக்கப் போகின்றீர்கள். இன்று இந்த சபையில் இந்த விடயங்களை தட்டிக் கேட்க கூட முடியாத முதுகெலும்பு இல்லாத பிரதிநிதிகளை தான் தேசிய மக்கள் சக்தியின் ஊடாக இந்த மக்கள் தெரிவு செய்திருக்கின்றார்கள் என்பதை அம்மக்கள் இனங்கண்டிருப்பார்கள். ஏனென்றால் இந்த சபையிலே தங்களுடைய கட்சியினுடைய நிலைப்பாட்டிற்கு மாறாக ஒரு கருத்து கூட சொல்ல முடியாத அளவிலேயே இருக்கின்றார்கள்.
கௌரவ ஜீவன் தொண்டமான் அவர்களின் உரையின் ஒரு பகுதியை வாசிக்கின்றேன். இன்று அதிக அடக்குமுறைகளை கொண்ட தொழிற்துறையாக பெருந்தோட்ட துறை காணப்படுகின்றது. தோட்ட முகாமையாளர்களின் தான்தோன்றித் தனமான அடக்குமுறைகளுக்கு மலையக சமூகம் முகங்கொடுக்க நேரிடுகிறது. தோட்ட முகாமையாளர்கள் அங்கு வசிக்கின்ற தொழிலாளர்களையும் குடியிருக்கும் மக்களையும் அடிமைகளாக நடத்துகின்றனர். இந்த முகாமையாளர்கள் பற்றிய விடயமும் தொடர்ச்சியாக கூறப்பட்டு வரும் விடயம். அதனால் தான் அம்மக்களுக்கு அந்த காணி உரிமை வேண்டும் என பேசுகின்றார்கள். கௌரவ அமைச்சர் சரோஜா அவர்களும் இருக்கின்றீர்கள். உங்களது அரசாங்கத்தில் இது பற்றி கூறுங்கள். வாக்கை மாத்திரம் பெற்று இந்த மக்களை ஏமாற்றிவிடாமல் தயவுசெய்து இந்த மக்களுக்காக குரல் கொடுங்கள்.
அதேபோல இன்றும் பல விடயங்களை சகோதரர் எழுதி தந்திருந்தாலும் அதை பற்றி பேசுவதற்கு நேரம் போதாது. அதேபோன்று இந்த மாகாண சபை முறைமை. மாகாண சபை தேர்தல் பற்றியும் ஒருசில வார்த்தைகள் கூற வேண்டும். கடந்த டிசம்பர் மாதம் தமிழரசு கட்சி சார்பில் நாம் ஜனாதிபதியை சந்தித்த போது, மாகாண சபை தேர்தலை கடந்த தேர்தல் முறையின் கீழ் நடத்துவதற்கு, நான் கடந்த பாராளுமன்றத்தில் கௌரவ சுமந்திரன் அவர்கள் முன்வைத்த தனிநபர் பிரேரணையை நான் கொண்டு வர போகின்றேன் என கூறிய போது, இல்லை அதனை அரசாங்கமே செய்யும் என கூறினார்கள். உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான சகல ஆயத்தங்களும் இடம்பெற்றுள்ளன. ஆனால் ஏன் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு தயார் நிலைக்கு கொண்டு வருவதற்கு அந்த சட்டத்தை கொண்டுவரவில்லை? இதற்கு நீங்கள் நிச்சயமாக பதில் கூற வேண்டும்.
அதேபோன்று கௌரவ கோடீஸ்வரன் அவர்கள் தொடர்ச்சியாக கடந்த நான்கு மாதங்களாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை பற்றி எத்தனையோ தடவை கேள்வி கேட்டிருக்கிறார். இதுவரைக்கும் ஒரு பதில் இல்லை. இந்த அம்பாறை மாவட்டத்தில் கல்முனையில் இருக்கின்ற தமிழ் மக்களை இதனை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய அரசாங்கத்தினால் இதனை செய்ய முடியாது. செய்ய முடியாவிடின் பதிலையாவது கூறுங்கள்.
அதேபோலதான் கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் சில அதிகளவான சனத்தொகை கொண்ட பிரதேச செயலகங்களை இரண்டாக பிரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பாக மட்டக்களப்பிலே களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகம், செங்கலடி பிரதேச செயலகம் கோரைதீவுபற்று பிரதேச செயலகம். இந்த விடயத்திலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன். அத்துடன் தோட்ட தொழிலாளர்கள் குறித்து ஒரு நேர்மையான தீர்மானத்தை எடுக்க முடியாவிடின் அந்த மக்களுக்கு ஆகக்குறைந்தது உண்மையையாவது கூறிவிடுங்கள் என தெரிவித்து எனது உரையை நிறைவு செய்கிறேன்.
No comments: