News Just In

2/21/2025 07:42:00 AM

எதிர்காலத்தில் பாதாள உலகத்தை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்!

எதிர்காலத்தில் பாதாள உலகத்தை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் – பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் ஜனாதிபதி வலியுறுத்து



பொதுமக்களின் பாதுகாப்புக்காக உள்ள உத்தியோகபூர்வ நிறுவனங்களில் சில நபர்கள் வரையில் பாதாள உலகத்தின் செயற்பாடுகள் விரிவடைந்திருப்பது விசாரணைகளில் தெரியவந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் நிச்சயமாக பாதாள உலகத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர சகல நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்காக சிறிது காலம் எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பத்தாவது பாராளுமன்றத்தின் பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அவருடைய தலைமையில் இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

நீதிமன்ற வளாகங்களில் பாதுகாப்புத் தொடர்பில் இங்கு கருத்துத் தெரிவித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, இது தொடர்பில் முன்மொழிவொன்று தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், எதிர்காலத்தில் சட்டத்தரணிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் சோதனையிடுவதற்கும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அத்துடன், தேசிய அனர்த்தக் குழுவை ஸ்தாபிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கான நடவடிக்கையை விரைவில் பூர்த்திசெய்யுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இக்கூட்டத்தில் கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, கௌரவ பாதுகாப்பு பிரதியமைச்சர் (மேஜர் ஜெனரல்) அருன ஜயசேகர (ஒய்வுபெற்ற), கௌரவ அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா (ஓய்வுபெற்ற), முப்படைத் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள், பாராளுமன்ற பதவியணித் தலைமை அதிகாரியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

No comments: