எப்போதும் மீன்பிடி அமைச்சராக தமிழர் நியமிக்கப்படுவது தமிழரே தமிழருக்குள் அடித்து கொள்ளத்தான்.இரா சாணக்கியன்
நேற்றையமுன் தினம் பாராளுமன்றத்தில் 22.02.2025. இது மிக முக்கியமான ஒத்திவைக்கும் பிரேரணையொன்று. வடக்கு மாகாண மீனவர்களினுடைய சார்பில் இலங்கை தமிழரசு கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்கள் முன்வைத்த பிரேரணையை நான் வழிமொழிகிறேன். உண்மையில் இது நீண்ட காலமாக உள்ள ஒரு பிரச்சினை.
கௌரவ அமைச்சர் சந்திரசேகரன் அவர்களுக்கு தேசிய மக்கள் சக்தி கட்சி தேசிய பட்டியலை வழங்கி, மீன்பிடித்துறை அமைச்சையும் வழங்கி வில்லங்கத்தையும் கையில் வழங்கியுள்ளனர். இது ஒரு வில்லங்கம். தமிழ் அமைச்சர் ஒருவரை இந்த துறைக்கு பொறுப்பாக நியமிப்பதற்கு காரணம் தமிழர்களுக்கு இடையேயே மோதிக் கொள்ளட்டும் என்பதற்காகத் தான். வட மாகாணத்தில் எத்தனையோ மீனவர்கள் இருக்கின்றார்கள். இந்த மீனவர்களுடைய பிரச்சினைக்கு தீர்வு காண்பது உங்களுடைய தலையிலே சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் உங்களுக்கு அரசாங்கம் இதற்கான ஒத்துழைப்பை வழங்குமா என்பது கேள்விக்குறியான ஒரு விடயம். நீங்களும் ஜே.வி.பி. அல்லது தேசிய மக்கள் சக்தி கட்சியினுடைய நீண்ட கால உறுப்பினர் என்ற அடிப்படையில் நீங்களும் இந்த அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் செய்யாவிட்டாலும் கூட அரசாங்கத்தினுள் இருந்து இதற்காக குரல் எழுப்ப முடியாத சூழ்நிலை இருக்கலாம். நாங்கள் உங்களுக்கு உதவுகின்றோம்.
நாங்கள் வெளியில் இருந்து எமது அழுத்தத்தை தருகிறோம். எனக்கு பாராளுமன்றத்திற்கு செல்ல முடியாதிருக்கிறது. தமிழரசு கட்சியினர் இவ்விடயத்தில் கடும் அழுத்தத்தை கொடுக்கிறார்கள். எனவே இதனை உடனடியாக நிறுத்துங்கள் என நீங்கள் உங்கள் அமைச்சரவை கூட்டத்தில் கூறுங்கள். இது நிறுத்த முடியாத ஒரு விடயம் அல்ல. வட மாகாணத்தினுடைய கடல் வளங்களை முழுமையாக அழித்து, எதிர்வரும் காலத்தில் மீனவர் என்ற துறையே இல்லாமல் செய்யும் செயற்பாடே இடம்பெற்று வருகிறது. இது உங்களது காலத்தில் மாத்திரம் அல்ல. கடந்த அரசாங்க காலப்பகுதியிலும் நடைபெற்றது. கடந்த 2017ஆம் ஆண்டு என்று நினைக்கின்றேன். நல்லாட்சி காலப்பகுதியில் கௌரவ எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராக ஒரு தனிநபர் பிரேரணையை கொண்டு வந்து இது சட்டமாக அமுல்படுத்தப்பட்டது. அந்த காலப்பகுதியில் எமது வட மாகாணத்தில் இருக்கின்ற மீனவர்களுக்கு தற்போது இருக்கும் அளவிற்கு பிரச்சினை இருக்கவில்லை. ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர், நான் ஏன் இதனை வில்லங்கம் என குறிப்பிட்டேன் என்றால், இதற்கு முன்னர் இத்துறைக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள். அவர் தற்போது பாராளுமன்றத்திற்கு வர முடியாமல் போனதற்கு காரணமும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமல் போனமை தான். அவர் இல்லாத இடத்தில் அவருக்கு எதிராக நாம் பேசக் கூடாது. எனினும் 2020 முதல் 2024 வரை அவர் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இந்த சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுபவர்களிடம் இருந்து அமைச்சருக்கும் ஒரு பகுதி போனது. அதனாலேயே அவர் நடவடிக்கை எடுக்கின்றார் இல்லை என்று பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த சபையிலே குற்றச்சாட்டு முன்வைத்தார்கள். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டாதல் இதே குற்றச்சாட்டு உங்கள் மீதும் வரலாம். நீங்கள் அவ்வாறானவர் இல்லை என்று எனக்கு தெரியும். ஆனால் மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். 2024 பாராளுமன்ற தேர்தலிலே வட மாகாணத்தில் இருக்கும் பல மீனவ அமைப்புகள் எங்களுடைய கட்சியை விட்டு உங்களுடைய கட்சிக்கு ஆதரவு வழங்கினார்கள். ஏனென்றால் இந்த அடிப்படையான மீனவப் பிரச்சினைக்கு நீங்கள் தீர்வு காண்பீர்கள் என்பதற்காகவே உங்களுக்கு வாக்களித்தார்கள். ஆனால் ஜனாதிபதி தெரிவாகி ஒன்பதாம் மாதம் 21ஆம் திகதி, நாங்கள் தற்போது பேசிக் கொண்டிருப்பது 2ஆம் மாதம் 22ஆம் திகதி. கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் கடந்து விட்டன. இதெல்லாம் வருடக் கணக்கில் காலம் கடத்த வேண்டிய விடயம் அல்ல. துணிந்து தீர்மானங்களை எடுக்க வேண்டும். எங்கள் மக்களை காப்பாற்றும் பொறுப்பு உங்களுடையது. உங்களுடைய கடமையை நீங்கள் செய்வதற்கு காலம் தேவை இல்லை.
எல்லாவற்றுக்கும் காலம் கேட்கிறார்கள். சரி எவ்வளவு காலம் தான் உங்களுக்கு தேவை? வெறுமனே காலம் தேவை, காலம் தேவை என்று கூறி இந்த சபையின் நேரத்தை வீணடிக்காது, ஒரு நான்கு மாதமா அல்லது ஆறு மாதமா அல்லது ஒரு வருடமா என குறிப்பிட்ட காலத்தை தெரிவியுங்கள். அது மாத்திரமன்றி இந்த சட்டவிரோத மீன்பிடியினால் எமது சுற்றுச்சூழலுக்கும் கடும் பாதிப்பு நிலவுகிறது. கடந்த அரசாங்க காலப்பகுதியில் நாங்கள் இந்த சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என கூறியதற்காக பாவனைக்கு உட்படாத பேருந்துகளை கொண்டுவந்து கடலில் போட்டனர். சட்டவிரோத மீன்பிடிக்கு அது ஒரு தடையாக அமையலாம் என அதனை செய்தனர். சில முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் முழுமையான தீர்வு காண முடியாது போனது. 2022ஆம் ஆண்டு கௌரவ அமைச்சர் அவர்களே, முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி கௌரவ ரவிகரனுடைய தலைமையில் நாம் எதிர்ப்பை தெரிவிக்கும் நோக்கில் சுமார் 500 – ஆயிரக் கணக்கான படகுகளை எடுத்துச் சென்றோம். அதனை தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்கு அப்பிரச்சினை இருக்கவில்லை. நாங்கள் கூறும் விடயம் சட்டவிரோத மீன்பிடியை நிறுத்துங்கள். இது வட மாகாணத்தில் மட்டுமல்ல. சட்டவிரோ மீன்பிடி முறை கிழக்கு மாகாணத்திலும் காணப்படுகிறது. கடலுக்குள் ஹை லைட் டோர்ச்சை அடித்து மீன்களை அள்ளிச் செல்வது. கடலுக்கு டைனமைட்டை போடுவது. அதனால் மீன்வளம் அழிக்கப்படும். அதனை தொடர்ந்து சிறிய துளைகளை கொண்ட வளைகளை கொண்டு வந்தனர். அது கரையிலிருந்து 7 கிலோ மீற்றருக்கு அப்பாலே பயன்படுத்தலாம். ஆனால் அது 7 கிலோ மீற்றருக்கு அப்பால் பயன்படுத்தப்படுகிறதா இல்லையா என்பதை நானோ, அமைச்சரோ சென்று பார்வையிட முடியாது. கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவோரை பிடிக்கும் அதிகாரம் மீன்வளத்துறை ஆய்வாளருக்கே (ஃபிஷரீஸ் இன்ஸ்பெக்டர்) உள்ளது. அவரிடம் கேட்டால், ஐயா நான் எவ்வாறு இரவு நேரத்தில் சென்று இவர்களை பிடிப்பது என கேட்கிறார். பொலிஸாரிடம் கூறினால், தரைக்கு வரும்போது அது 7 கிலோ மீற்றருக்கு அப்பால் பாவிக்கப்பட்டதா அதற்குள் பாவிக்கப்பட்டதா என எவ்வாறு கண்டறிவது என கேட்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட சிலரை நாம் பெயருடன் அடையாளப்படுத்தினோம்.
வரவு செலவு திட்டத்தில் அதிகளவான ஒதுக்கீடு பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களாலேயே கட்டுப்படுத்த முடியாது என கூறினார்கள். கட்டுப்படுத்த முடியாவிடின் பிறகென்ன கடற்படை? சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த முடியாவிடின் பிறகெதற்கு கடற்படை என்று பெயர். எனவே கௌரவ அமைச்சர் அவர்களே இது ஒரு முக்கியமான பிரச்சினை. உங்களை நாம் குறை சொல்லவில்லை. தயவுசெய்து அதனை தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள். இந்த பிரேரணை ஊடாக நாம் ஒரு கோரிக்கையையே முன்வைக்கிறோம். உங்களுடைய சக பெரிய அமைச்சர்களுக்கு இந்த விளக்கங்கள் தெரியாது. அண்மையில் ஒரு கோரிக்கை முன்வைத்த போது அதனை சாதகமான முறையில் பரிசீலிக்காமல் தமக்குதான் சகல விடயங்களும் தெரிந்தது போல ஒரு பட்டியலை வாசித்துவிட்டு சென்றார்கள். நாம் உங்களிடம் இந்த பிரச்சினையை முன்வைக்கிறோம். நீங்கள் ஒரு அமைச்சர். அந்த பிரதேசத்தில் நீண்ட காலமாக இருந்தவர். இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்தவர். அதற்கு தான் இந்த அரசாங்கம் உங்களுக்கு இப்பதவியை வழங்கி இருக்கிறது. ஆனால் என்னுடைய பார்வையில் உங்களுக்கு ஒரு வில்லங்கத்தை தந்திருக்கிறார்கள். கௌரவ ரவிகரனுடைய இந்த ஒத்திவைக்கும் பிரேரணையை வழிமொழிந்து இப்பிரச்சினைக்கு காலம் கடத்தாது ஒரு தீர்வை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கிறேன்.
No comments: