News Just In

12/31/2024 10:51:00 AM

அனைத்து அரச நிறுவனங்களிலும் நாளை விசேட நிகழ்வுகள் ஏற்பாடு!

அனைத்து அரச நிறுவனங்களிலும் நாளை விசேட நிகழ்வுகள் ஏற்பாடு!



2025 ஆம் ஆண்டுக்கான கடமைகள் ஆரம்பிக்கும் நாளான நாளை அனைத்து அரச நிறுவனங்களிலும் உத்தியோகபூர்வ வைபவம் இடம்பெறும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டப்பூர்வ சபைகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை விடுத்து அறிவித்துள்ளதாக விடயம் தொடர்பான அமைச்சின் செயலாளர் அலோக பண்டார குறிப்பிட்டுள்ளார்.

புதிய வருடத்தில் “தூய்மையான இலங்கை” (கிளீன் ஶ்ரீலங்கா) தேசிய வேலைத்திட்டத்துடன் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென அந்த சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொதுத்துறை மற்றும் தனியார் துறையுடன் இணைந்து தூய்மையான இலங்கை வேலைத்திட்டத்தை நாளை ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பிக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திட்டமிட்டுள்ளார்.

தூய்மை இலங்கை நிகழ்ச்சித் திட்டத்தின் தேசிய வைபவத்தை அனைத்து அரச மற்றும் தனியார் இலத்திரனியல் அலைவரிசைகள் ஊடாக ஒலிபரப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், அனைத்து அரச நிறுவனங்களின் ஊழியர்களும் இதனைக் காணும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அனைத்து அரச ஊழியர்களும் தூய்மையான இலங்கை உறுதிமொழியை நேரலையில் வாசிக்குமாறு பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தனது சுற்றறிக்கை மூலம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments: