News Just In

8/10/2024 06:50:00 PM

வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது 205 தாக்குதல் சம்பவங்கள்: இந்து அமைப்பினர் அதிர்ச்சி தகவல்!






 வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசு கவிழ்ந்ததை அடுத்து அந்நாட்டில் கடந்த சில நாட்களில் 205 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளதாக அந்நாட்டின் சிறுபான்மை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.

வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக ஏற்பட்ட போராட்டம் காரணமாக அவர் கடந்த 5-ம் தேதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பி வந்தார். ஷேக் ஹசீனாவின் ராஜினாமாவை அடுத்து, அந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக தாக்குதல்கள் அதிகரித்தன. இதனிடையே, நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகம்மது யூனுஸ் தலைமையில் தற்காலிக அரசு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மை அமைப்புகளான இந்து, புத்த, கிறிஸ்த ஒற்றுமை கூட்டமைப்பு மற்றும் பூஜா உத்ஜபன் பரிஷத் ஆகிய அமைப்புகள் முகம்மது யூனுஸிடம் கடிதம் ஒன்றை அளித்துள்ளன. அதில், "கடந்த 5-ம் தேதி முதல் சிறுபான்மையினருக்கு எதிராக வங்கதேசத்தில் 205 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. ஆயிரக்கணக்கான இந்துக் குடும்பங்கள் நிர்க்கதியாகிவிட்டன. பல கோயில்கள் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டன. பல பெண்கள் தாக்குதலை எதிர்கொண்டுள்ளனர். பல இடங்களில் கொலைகள் நடந்துள்ளன. மற்ற சிறுபான்மையினரும் இந்த காலகட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்தை நாங்கள் வரவேற்கிறோம். அதேநேரத்தில், ​​சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வகையில் வன்முறைகளை நடத்தி இந்த சாதனையை களங்கப்படுத்த ஒரு கட்சி சதி செய்வதை நாங்கள் வருத்தத்துடனும் கனத்த இதயத்துடனும் குறிப்பிட கடமைப்பட்டிருக்கிறோம். ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கிய வகுப்புவாத வன்முறை வங்கதேசத்தில் சிறுபான்மையினரிடையே பரவலான அச்சம், பதற்றம் மற்றும் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அமைதியின்மை சர்வதேச கண்டனத்தையும் விளைவித்துள்ளது. இந்தப் போக்கை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர நாங்கள் வலியுறுத்துகிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச இந்து புத்த கிறிஸ்தவ ஒற்றுமை கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ராணா தாஸ்குப்தா, வங்கதேச பூஜா உத்ஜபன் பரிஷத் தலைவர் பாசுதேவ் தார் ஆகியோர் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். கூட்டமைப்பின் மூன்று தலைவர்களில் ஒருவரான நிர்மல் ரொசாரியோ, "எங்கள் வாழ்வு பேரழிவு நிலையில் உள்ளதால் நாங்கள் பாதுகாப்பைத் தேடுகிறோம். நாங்கள் இரவில் விழித்திருக்கிறோம். எங்கள் வீடுகள் மற்றும் கோயில்களைக் காத்து வருகிறோம். இதுபோன்ற ஒரு சூழலை நான் என் வாழ்நாளில் பார்த்ததில்லை. நாட்டில் மத நல்லிணக்கத்தை மீட்டெடுக்க அரசாங்கத்தை நாங்கள் கோருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

ஒற்றுமை கவுன்சிலின் பிரீசிடியம் காஜல் தேவ்நாத், "யாரும் இல்லாத நிலையில் வீட்டையோ, கோயிலையோ விட்டுச் செல்ல முடியாத நிலை உள்ளது. பல இந்து சமூகத்தினர் இப்போது மற்றவர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். நானும் நண்பர் வீட்டில் தங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். சிறுபான்மையினரைத் தாக்கியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அரசியல் காரணங்களுக்காக சிறுபான்மையினர் தாக்கப்பட்டால், அது மேலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். வீடுகளை எரிப்பதும் கொள்ளையடிப்பதும் நீதிக்கு வழிவகுக்காது" என்று கூறியுள்ளார்.

ஒரு கேள்விக்கு பதிலளித்த காஜல், "இடைக்கால அரசாங்கத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவில் மற்ற மத நூல்களிலிருந்து குறிப்பிட்ட பகுதிகளை வாசிக்காதது அரசியலமைப்பு, பாகுபாடு எதிர்ப்பு மதிப்புகளுக்கு முரணானது. எதிர்கால அரசு விழாக்களில், அனைத்து முக்கிய மத நூல்களின் வாசிப்புகளும் சேர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சிறுபான்மை சமூகங்கள் மீதான அனைத்து தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும், குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தலைநகர் டாக்காவில் நேற்று (வெள்ளிக்கிழமை) நூற்றுக்கணக்கான சிறபான்மை மக்கள் பேரணிகளை நடத்தினர்.

பிரதமர் மோடி வேண்டுகோள்: இதனிடயே, வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பேராசிரியர் முகம்மது யூனுஸ் தலைமையிலான புதிய அரசுக்கு இந்திய பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், “புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டுள்ள பேராசிரியர் முகம்மது யூனுஸுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதுடன், ஒரு விரைவான இயல்பு நிலையை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி தொடர்பான நமது இரு நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற வங்கதேசத்துடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதியாக உள்ளது” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

No comments: