News Just In

4/19/2024 03:14:00 PM

உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபன திணைக்கள சேவைகளில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக் கூறலையும் மேம்படுத்தல்!



(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

“பயனுறுதிமிக்க மக்கள் பங்களிப்பின் ஊடாக உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபன திணைக்கள சேவைகளில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக் கூறலையும் மேம்படுத்தல்” எனும் செயற்திட்டத்தின் மீளாய்வுக் கூட்டம் மூதூர் பிரதேச செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இளைஞர் அபிவிருத்தி அகம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் அனுசரணையில் மூதூர் பிரதேச செயலகத்தின் ஒழுங்குபடுத்தலில் மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மூதூர் பிரதேச சபைச் செயலாளர் எஸ். சத்தியசோதி, மூதூர் பொலிஸ் பெருங்குற்றவியல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி ரூபசிங்ஹ, சமூர்த்தி தலைமையக முகாமையாளர் வி. கோடீஸ்வரி உள்ளிட்டோரும் ஆசிய மன்றம் நிறுவனத்தின் பிரதிநிதிகள், இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் தங்கராஜா திலீப்குமார் உள்ளிட்ட இன்னும் பல அதிகாரிகளும் முதன்மை அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மூதூர் பிரதேச செயலகப் பிரிவு மற்றும் மூதூர் பிரதேச சபைப் பிரிவு ஆகியவற்றில் உள்ளடங்கும் உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் அரச திணைக்களங்கள் கூட்டுத் தாபனங்களின் பொறுப்பு அதிகாரிகள், அதன் தலைவர்கள்;, பொலிஸ் பொறுப்பு அதிகாரிகள் தலைவர்கள், அலுவலர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், மகளிர்சங்க உறுப்பினர்கள், கூட்டுறவு அமைப்புக்களின் அங்கத்தவர்கள் சங்கங்கள் பொது அமைப்புக்கள் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் பங்குபற்றினர்.

நிகழ்வில் அரச நிருவாகம்; கூட்டுத்தாபன திணைக்களங்கள், உள்ளுராட்சி மன்றங்கள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்படும் சேவைகள் அவற்றைப் பொதுமக்கள் பெற்றுக் கொள்வதற்கான இலகு வழிமுறைகள் பற்றிய தெளிவுகள் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகளால் வழங்கப்பட்டன. அத்துடன் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அவற்றுக்கான தீர்வுகளை அணுகும் வழிமுறைகள் பற்றி சிவில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளால் சபையில் முன்வைக்கப்பட்டது. அவற்றுக்கான சாத்திமான தீர்வுகளையும் சம்பந்தப்பட்ட துறைசார்நத அதிகாரிகள் முன்வைத்தனர்.

இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனம் சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்) நிறுவனத்தின் நிதி அனுசரணையில் கூட்டுறவுத்துறை சார்ந்த திட்டங்களையும், பெண்கள் வலுவூட்டலோடு அபிவிருத்திகளை உறுதிப்படுத்தும் வகையில் பயிற்சிகள், செயலமர்வுகள், விழிப்புணர்வுகள், தொழில்துறை உற்பத்திக் கண்காட்சிகள், கற்றல் கள விஜயங்கள், பொருளாதார வாழ்வாதார உதவு ஊக்கங்கள் என்பனவற்றை வழங்கி வருகின்றது.

No comments: