News Just In

2/09/2024 05:42:00 AM

தூரிகை வரையும் மின்மினிகள்”!




இரசனைக் குறிப்பு

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

“தூரிகை வரையும் மின்மினிகள்”

ஹைக்கூ கவிதை நூலுக்கான இரசனைக் குறிப்பு

நூலாசிரியர்

வைத்தியர் ஜலீலா முஸம்மில் எம்பி.பி.எஸ்.

ஏறாவூர்

வைத்தியர் ஜலீலா முஸம்மில் அவர்கள் படைத்த தூரிகை வரையும் மின்மினிகள் எனும் விருந்தில் 786 வகையறாக்களைச் சுவைத்தேன். அவற்றில் சில சுவைகளை நான் உங்களோடு வார்த்தைகளாகப் பகிர்ந்து கொள்கின்றேன்.

நான் ரசித்தது. சிரித்தது, சிந்தித்தது, வியந்தது என்று வகைப்படுத்தியுள்ளேன்

முதலில் நான் ரசித்தவைகள்

“கிராமத்துக்குச் சென்ற பாட்டி

உறங்கவே இல்லை

பட்டணத்துப் பேரன்"

இங்கு பாட்டியும் உறங்கவில்லை. பட்டணத்துப் பேரனும் உறங்கவில்லை.

பாட்டி ஏன் உறங்கவில்லை?

கிராமத்து வீட்டில் 'அவரது இளமைக்கால மகிழ்ச்சியும், துன்பமும் கலந்த கலவையான நினைவுகள் அவரைத் தூங்கவிடவில்லை.

பட்டணத்துப் பேரன் ஏன் உறங்கவில்லை?

கதை சொல்லித் தாலாட்டித் தூங்கவைக்கப் பாட்டியில்லை, என்னவொரு பரிதாபம். இருவர் கண்களும் பனிக்கின்றன. தூக்கமின்றித் தவிக்கின்றன.

“பரந்த உலகம்

பரவசத்தோடு பார்க்கிறேன்

அப்பா உன் தோள்களில்”

அப்பாவின் தோள்களில் இருந்து இந்த உலகைப் பார்க்கின்ற பார்வை. மிக அழகானது, அலாதியான அனுபவத்தைத் தருவது. எந்தவொரு மகளுக்கோ மகனுக்கோ நினைவலைகளில் நின்று நிலைத்துக் கொண்டிருப்பது.

“தேநீரில் எறும்பு

இனிப்புடன் சுவைக்கும்

அகால மரணம்” .

“தற்கொலைத் தாக்குதலுக்கென்று அறிந்திருக்கவில்லை

பெட்டிக்குள் அடுக்கப்பட்ட தீக்குச்சிகள்”

இவை யாவும் என்னைச் சிந்தித்துச் சிரிக்க வைத்தவை.

கவிஞரின் நகைச்சுவை உணர்விற்கு சான்று பகரும் கவிதைகளாக இவற்றைப் பார்க்கிறேன்.

“அரச ஊழியர்கள் வயதெல்லை

அறுபதென அறிவிக்கின்றார்.

எழுபதுகள் தாண்டிய சபாநாயகர்.

“கந்தலை உடுத்தபடி

கம்பீரமாக நிற்கிறது

காவல் வெருளி”

“ஒட்டுபவனுக்கு வறுமை

பயணிக்கு நாகரீக மோகம்

இருவர் காற்சட்டையிலும் ஓட்டை.

நான் வியந்தவைகள்

“கால்களின் தாளத்தில்

மெல்ல உருவாகிறது

கைத்தறித் துணி.”

“வரிக்கு வரி

அழகாகத்தான் இருக்கிறது

வரிக்குதிரை”

“விழித்தே கிடக்கிறது.

பசித்தவனையும் புசித்தவனையும் பார்த்து

நெடிய இரவோடு நிலா”

“சாதிக்கும் இடத்திற்கு

சென்று வென்று விடுகிறது

சாதி”

சிந்திக்க வைக்கும் கவிகள் பற்றி நான் அதிகம் பேசமாட்டேன் ஏன் என்றால் நீங்களும் சிந்திக்க வேண்டும் என்பதற்காக.

“மக்கள் போராட்டம் குறைந்து

சகஜமான நிலையில்

வாழ்க்கையின் வலிகள்"

“புத்தாடையில் தாத்தா

கம்பீரமாக இருக்கிறார்

அஞ்சலிக்கு முதியோர் இல்லத்தில்"

“இறந்து பிறந்த சிசு

கவலைப்படவில்லை

மலட்டுப் பட்டம் பெற்ற பெண்.”

எல்லா மதங்களும்

ஒரே வரிசையில்

கொரோனா புதைகுழிகள்

கவிஞரின் மேலும்; பல படைப்புக்கள் இலக்கிய உலகிற்காக இன்னும் வெளிவர வேண்டும்.

எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்கி அருள் புரிய வேண்டும். பிரார்த்திக்கிறேன்.

கே. பாத்திமா ஹஸ்னா

போதனாசிரியர்.

அஞ்சற் பயிற்சிக் கல்லூரி மட்டக்களப்பு


No comments: