News Just In

2/05/2024 09:00:00 PM

பிரதான சூத்திரதாரி பசில்: கெஹெலிய வழக்கில் புதிய திருப்பம்!





இந்திய கடன் திட்டங்களின் கீழ் தரமற்ற மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்த மோசடியின் பிரதான சூத்திரதாரி பசில் ராஜபக்ச என்று நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கடந்த சனிக்கிழமை மாளிகாகந்தை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரது சட்டத்தரணி, அனூஜ பிரேமரத்ன இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளார்.

அமைச்சர் கெஹெலிய தரப்பில் முன்னிலையகி வாதிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி அனூஜ பிரேமரத்ன, தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

”இந்திய கடன் திட்டத்தின் கீழ் மருந்துகளை கொள்வனவு செய்யும் திட்டத்தில் கையெழுத்திட்டது அப்போதைய நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்சவே அன்றி கெஹலிய ரம்புக்வெல்ல அல்ல.

மருந்து கொள்முதல் செயல்முறையை தனியாருக்கு வழங்கியதும் அப்போதைய நிதி அமைச்சுதான்.

இதற்கமைய முதல் குற்றவாளியாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கெஹலிய எந்த தவறும் செய்யவில்லை.” என வாதிட்டுள்ளார்.

இதற்கிடையே பசில் ராஜபக்ச இந்த திட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளதாக கெஹெலியவின் சட்டத்தரணி அனூஜ பிரேமத்ன முன்வைத்துள்ள கருத்து தற்போது பொதுத்தளத்திலும் அரசியல் களத்திலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



பசில் ராஜபக்சவுக்கும் இந்த மோசடியில் தொடர்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு, எதிர்வரும் 15ம் திகதி கெஹெலியவின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது, இதே கோரிக்கையை நீதிமன்றத்தில் முன்வைக்க கெஹெலிய தரப்பும் தீர்மானித்துள்ளதாக தெரிய வந்துள்ளது

No comments: