
ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாடு நாளை சனிக்கிழமை (21) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் சுகததாச உள்ளக அரங்கில் மாலை 03 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியை புதுமையான முறையில் மீளுருவாக்கம் செய்யும் வகையிலும், ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராவதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்குமான முன்னோடியாக இந்த விசேட மாநாடு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
அத்தோடு கட்சி யாப்பை மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் இங்கு முன்னெடுக்கப்படவுள்ளது.
இம்மாநாட்டை கடந்த (10) நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் மழை உள்ளிட்ட சில காரணிகளால் குறித்த தினத்தில் மாநாடு நடத்தப்படவில்லை.
எவ்வாறிருப்பினும் ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராவதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கான ஒரு முன்னோடியாக இந்த மாநாடு அமையும்.
பதவிகளுக்கு முக்கியத்துவமளிக்காமல், புதிய இளம் தலைமுறையினருக்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்.
அதற்கேற்ப புதிய முகங்களும் ஐ.தே.க.வில் இணையவுள்ளன. ஐ.தே.க. முகாமைத்துவ குழுவிலுள்ள பதவிகளில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை. இதன் 07 உறுப்பினர்களும் சிறந்த புரிந்துணர்வுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
2048 ஆண்டை வெற்றி கொள்வோம் என்ற தொனிப்பொருளின் கீழ், கடனற்ற இலங்கையை கட்டியெழுப்பும் திட்டமிடலில் இனிவரும் பயணங்கள் அமையும்.
No comments: