News Just In

10/01/2023 11:37:00 AM

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம்!

அடுத்த ஆண்டுக்கான (2024) முன்கூட்டிய ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இந்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அரச செலவினங்களில் 203 பில்லியன் ரூபாய் உயர்வு மதிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவே தேர்தல் ஆணையகத்துக்கு 2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் ஊடாக 11 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படவுள்ள நிலையில் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதை தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூலை 20ஆம் திகதியன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தால் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தநிலையில், ஜனாதிபதியின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடைந்து அந்த காலப்பகுதியில் தேர்தல் நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும் 2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு யோசனையின்படி அரசின் செலவினம் 3,860 பில்லியன் ரூபாய்கள் ஆகும். எனினும் 2023 உடன் ஒப்பிடும்போது 203 பில்லியன் ரூபாய்களால் இது அதிகமாகும் எனவே 2023ஆம் ஆண்டு உத்தேச செலவு 3,657 பில்லியன் ரூபாய்களாக இருந்தது.

அத்துடன் பொதுநிர்வாகம், உள்நாட்டலுவலகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு வரவிருக்கும் சட்டமூலத்தில் மிகப்பெரிய ஒதுக்கீடாக 886 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படுகிறது. 2023ஐ விட இது 856 பில்லியன் ரூபாய்கள் அதிகமாகும்.

இதைத் தொடர்ந்து நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சகத்துக்கு 723 பில்லியன் ஒதுக்கப்படுகிறது. இது 2023ஆம் ஆண்டில் 614 பில்லியன் ரூபாய்களாக இருந்தது.

பாதுகாப்பு அமைச்சகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதற்கு 423 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்படுகின்றன. இதேவேளை 2023 இலும் அந்த அமைச்சுக்கு 410 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டன.

சுகாதார அமைச்சுக்கு ரூ. 410 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படுகிறது. சுகாதார அமைச்சகத்துக்கு கடந்த ஆண்டு 322 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்துக்கு 403.6 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய அமைச்சுக்களில் கல்வி அமைச்சுக்கு 237 பில்லியன் ரூபாய்களும், பொது பாதுகாப்பு அமைச்சுக்கு 140.7 பில்லியன் ரூபாய்களும், விவசாய அமைச்சுக்கு 100 பில்லியன் ரூபாய்களும், நீர்ப்பாசன அமைச்சுக்கு 84 பில்லியன் ரூபாய்களும் ஒதுக்கப்படுகின்றன இதற்கிடையில் ஜனாதிபதி அலுவலகத்துக்கு 6.6 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்படுகின்றன.

No comments: