
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
சிவில் விமானப் போக்குவரத்துத் துறையை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிப்பதற்காக தெளிவூட்டும் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் செவ்வாயன்று 05.09.2023 மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் இளங்கோவன், சிவில் விமானப் போக்குவரத்து சேவைகள் ஊக்குவிப்புப் பிரிவின் தலைவர் பிரபாத் குலரத்ன மற்றும் ''குவன்சர'' சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் நிலந்த தென்னகோன் ஆகியோர் சிவில் விமான சேவை துறை தொடர்பாகத் வெளிப்படுத்தினார்கள்.
பாடசாலை மாணவர்களின் எதிர்கால இலட்சியங்களுக்கு கனவுகளை ஏற்படுத்தவுள்ள புதிய தொழில் துறையாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை மற்றும் அதில் உள்ள விமானி, பொறியியலாளர் மாத்திரமன்றி காணப்படும் பல்வேறு தொழில் வாய்ப்புக்கள் தொடர்பாக அறிவூட்டல் நிகழ்ச்சியாக இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
மாணவர்களை பங்குபற்றச் செய்வதால் மாதிரி விமானங்களைத் தயாரித்தல், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குதல், மற்றும் விமான நிலையங்களுக்கு செல்லும் போது அங்கு நடந்துகொள்ளும் நடைமுறைகள் போன்ற பல்வேறு செயல்பாடுகளில் மாணவர்கள் உள்ளீர்க்கப்படுவார்கள் என இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 400 பாடசாலை மாணவர்களுக்கு இதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் உட்பட வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
No comments: