கிளிநொச்சி பளையை சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பெண்ணொருவரை பெண் பார்க்க சென்றுள்ளார்.
இளைஞன் பெண்ணை பார்த்து சென்ற சில நாட்களில் இளைஞனின் தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது.
இதில் தான் அவுஸ்ரேலியாவில் இருந்து கதைப்பதாகவும் தன்னை இப்பெண்ணின் சகோதரர் என அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது தங்கை வெளிநாட்டு மாப்பிள்ளையை எதிர்பார்ப்பதாகவும் அதனால் உங்களை நான் வெளிநாட்டுக்கு எடுத்து விட முயற்சிப்பதாகவும் கூறி அதற்காக 18 இலட்ச ரூபாய் பணத்தினை இந்த கணக்கு இலக்கத்திற்கு வைப்பிலிடுமாறு ஒரு கணக்கிலக்கத்தை வழங்கியுள்ளார்.
இதனால் அவ் இளைஞனும் பணத்தினை வைப்பிலிட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்கள் கடந்த நிலையிலும் தனது வெளிநாட்டு அலுவல்கள் எதுவும் முன்னெடுக்கப்படாத நிலையில் இருந்துள்ளது.
இதனை சுதாகரித்துக்கொண்ட அவ் இளைஞன் அவுஸ்ரேலிய நபருடன் தொடர்பு கொண்டு முரண்பட்ட போது அவர் தொடர்பை துண்டித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அந்த தொலைபேசி இலக்கமும் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் இளைஞன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததோடு அதன் பிரகாரம் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இளைஞன் பணத்தை வைப்பிலிட்ட கணக்கிலக்க உரிமையாளரான கிளிநொச்சியை சேர்ந்த பெண்ணை கைது செய்தனர்.
கணக்கு இலக்கத்திற்கு பல தடவைகள் இலட்ச ரூபாய் வைப்பிலிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது இவ்வாறாக வடமராட்சி பகுதியில் உள்ள இளைஞனையும் ஏமாற்றி வருவது தெரிய வந்துள்ளது.
அதேவேளை மானிப்பாயில் இளைஞன் பெண் பார்க்க சென்ற அப் பெண் வேறு ஒரு நபரை திருமணம் செய்துள்ள நிலையில் அவரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது பளை இளைஞன் தன்னை பெண் பார்த்து சென்ற உடனேயே இளைஞனை பிடிக்கவில்லை என கூறி விட்டதாகவும் அதன் பின்னர் தனது சகோதரன் அவரை ஏமாற்றிய விடயம் தனக்கு தெரியாது எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments: