News Just In

6/11/2023 09:27:00 AM

கல்வி என்பது இலகுவாக பெறக்கூடியது அல்ல: யாழ்.மாவட்ட தனியார் கல்வி நிறுவனத்தின் கருத்து!

மாணவரின் கல்வியே வாழ்வை உயர்த்தும். ஆன்மீகமும், பொழுதுபோக்குகளும் இன்று அர்த்தமற்றவையாக மாறிவிட்டன என யாழ்ப்பாண மாவட்ட தனியார் கல்வி நிறுவன இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜுலை முதலாம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தில் தரம் ஒன்பது வரையான மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் தனியார் வகுப்புக்களை நடாத்துவதை நிறுத்த யாழ்ப்பாண மாவட்ட செயலக கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்நிலையிலேயே தனியார் கல்வி நிறுவன இயக்குநர்களின் ஆதங்கம் வெளியாகியுள்ளது. தமிழ் மாணவர்களின் கல்வி என்பது இலங்கை நாட்டில் காணக்கூடிய கனியே தவிர இலகுவாகப் பெறக்கூடியது அல்ல.

இது காலம் காலமாக அனுபவித்த உண்மை. அதனாலேயே பல்லாயிரம் உயிர்களைப் பறிகொடுத்தோம். அதன் பின்னரும் விடிவு கிடைத்ததா என்பதற்கு இன்றைய உயர்நிலை அதிகாரிகளே பதில் சொல்லட்டும்.
கல்விக்கான களஞ்சியசாலை

ஏனெனில் அவர்களில் பலர் அத்துன்பங்களை அனுபவித்தவர்கள். யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தமிழரின் கல்விக்கான களஞ்சியசாலை. இதனை சீர்குலைத்து அழிக்க பல அழிவுகள் அட்டூழியங்கள் நடந்தேறின.

அக்காலங்களில் தனியார் கல்வி நிறுவனங்கள் எத்தகைய பங்கு வகித்தன என்பதனை எல்லோரும் அறிவர். யாழ்ப்பாண மாவட்டத்தில் ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தனியார் கல்வி நிறுவனங்களைப் பூட்டி ஆன்மீக உணர்வுக்கும் பொழுது போக்குகளுக்கும் மாணவர்களை அனுமதிக்க வேண்டும்.

இல்லையேல் கடும் நடவடிக்கை என ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய பல விடயங்களை விட்டுவிட்டு ஆன்மீகத்தையும் பொழுதுபோக்கையும் பெருக்க வேண்டுமென்பது எழுத்து மூலமான அல்லது பேச்சு மூலமான நடவடிக்கை மட்டுமே.

“தனியார் கல்வி நிலையங்களுக்கு மாணவிகள் சுதந்திரமாக சென்று திரும்ப முடிகின்றதா” “பாடசாலை மாணவர்களிடையே போதைப் பொருட்கள் திணிக்கப்படுகிறதே.”

“சிறு பராயத்தினர் விபத்துக்களில் மாண்டு போகின்றனரே” இவற்றுக்கு கடும் நடவடிக்கை எடுக்க முடியாதா? இதைவிட ஆன்மீக சிந்தனை என்பது குடும்ப ரீதியாக பெற்றோர்களால் ஊட்டப்படவேண்டியது என்பதற்கு அப்பால் ஆன்மீகக் காப்பகங்களின் அதன் காப்பாளர்களின் செய்திகள் எமக்கு எத்தகைய எண்ணங்களை ஏற்படுத்துகின்றன.

இவை குழந்தைகள் மனதில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. குடாநாட்டில் மாணவச் சிறார்களின் மன அழுத்தங்களைக் குறைக்கும் பொழுதுபோக்கு மையங்கள் எத்தனை உள்ளன. எங்கு உள்ளன. அங்கு குழந்தைகளோடு செல்லலாமா?

உதாரணமாக யாழ் பண்ணையில் அமைந்துள்ள ஆறுதல் அமர்விடத்திற்கு செல்லலாமா? மாணவர்களிடையே ஆன்மீக சிந்தனைகளைப் பெருக்கி மன அழுத்தங்களைக் குறைத்து நல்மனிதர்களாக ஆக்கலாம் என்பது ஆன்மீகவியலாளர்களின் அன்றைய வாக்கு. அது அன்று பலனளித்தது. ஆனால் இன்று அப்படியல்ல. ஒவ்வொரு பெற்றோரும் கல்வி ஒன்றே வாழ்வின் ஆதாரம் என பெரும் குறியாக உள்ளனர்.

அதிலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் எந்தத் தொழிலுக்கும் எப்பொழுதும் வாய்ப்பே இல்லை. இன்று இத்தகைய கல்வி நிறுவனங்களை மூடவேண்டும் என்ற முடிவுகளை எடுப்பவர்கள் கல்வியை மட்டும் கருத்தில் வைத்திருந்தவர்கள்.


தனியார் கல்வி நிலையங்களை மூடி ஆன்மீக பொழுது போக்கிற்கு விட வேண்டும் என்பதில் உடன்பாடு இருந்தாலும். பணமுள்ளவர்கள் இந்த வெள்ளி, ஞாயிறு நாட்களில் பிள்ளைகளை பிரத்தியேக வகுப்புகளுக்கு அனுப்புவதை நிறுத்த முடியுமா?

பாடசாலைகளில் மாலை நேர வகுப்புகளையும், சனி, ஞாயிறு வகுப்புகளையும் நிறுத்தமுடியுமா? தரம்:5 புலமைப் பரிசில் பரீட்சை என்பது விமர்சனங்களுக்கு அப்பால் பலரின் சந்ததி வாழ்க்கையை உயர்த்தியுள்ளது.

இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ளவர்களின் நிலை என்ன? கல்வியியலாளர் என்போர் இன்று வெறும் சொல் வளவாளர்களே! அவர்கள் தங்களை கல்வியியலாளர்களாக உயர்த்தி தங்கள் பிள்ளைகளையும் உயர்த்திக்கொண்டு வெறும் கல்வித் தத்துவங்களை மற்றையோர்மீது திணிப்பது எத்தகை பொருத்தமுடையது.

என்ற பல நியாயமான கேள்விகளை முன்வைத்து கல்வி நிறுவன இயக்குநர்களால் ஊடகங்களுக்கு இச்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. கடுமையான நடவடிக்கை என செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் இந்த நியாயமான கேள்விகளையும் பிரசுரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments: