News Just In

2/08/2023 07:59:00 AM

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி மட்டக்களப்பில் நிறைவு!!

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி நான்காவது நாளான நேற்று  (07)நிறைவு பெற்றது.

நேற்று காலை வெருகல் ஸ்ரீ வேலாயுதசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகிய நிலையில், அனைவருக்கும் பொதுவான இறைவன் இந்த பேரணியையும் தமிழ் மக்களையும் ஆசிர்வதிக்க வேண்டும் என்று வேலன் சுவாமிகள் எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்தித்து ஆசியுரையாற்றினார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், பாதிக்கப்பட்ட தரப்புகள், சிவில் சமூகங்கள், மத தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உட்படப் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த அடிப்படையிலே இப் பேரணி வெருகலில் ஆரம்பித்து, வாகரைக் கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தங்களுடைய பயணத்தை முன்னெடுத்திருந்தனர்.

தொடர்ந்து கதிரவெளிச் சந்தி, மாங்கேணிச் சந்தி, வாழைச்சேனை, அதைத் தொடர்ந்து கிரான், வந்தாறுமூலை, சித்தாண்டி, செங்கலடி என்று தொடர்ந்து பயணித்து தன்னுடைய பயணத்தை மட்டக்களப்பில் நிறைவு செய்தது.

இப்பேரணி வெருகலிலிருந்தது வருகை தருகையில் பொதுமக்கள், அரசியல் வாதிகள், ஆலயத் தலைவர்கள், விளையாட்டுக் கழக அங்கத்தவர்கள் எனப் பல ஆயிரக் கணக்கானோர் வீதியெங்கும் திரண்டு நின்று உணர்வு பூர்வமான ஆதரவினை வழங்கிக் கொண்டனர்.

இதேவேளை இப்பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அம்பாறையிலிருந்து ஆரம்பமான பேரணி காரைதீவு, கல்முனை, பாண்டிருப்பு, கல்லாறு, களுவாஞ்சிகுடி, குருக்கள்மடம், ஆரையம்பதி, கல்லடிப் பாலம் ஊடாக மட்டக்களப்பு நகரில் வடக்கிலிருந்து கிழக்கை நோக்கிய பேரணியுடன் சங்கமமானது.

இதனையடுத்து மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபியில் உயிர்நீத்த ஊடகவியலாளர்களுக்காக கற்பூரம் பற்ற வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் பேரணியாக மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தனர்.

அங்கே பல்கலைக்கழக மாணவர்கள், சமயப் பிரமுகர்கள், அரசியல் வாதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் எழுச்சிப் பேரணி மட்டக்களப்புப் பிரகடனம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் ஜெயராம் றாபின் வாசித்தார். அதனோடு எழுச்சிப் பேரணி நிறைவுக்கு வந்தது.







(அகிலன்)

No comments: