வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய எழுச்சிப் பேரணியின் நிறைவு நாள் நிகழ்வு நாளை மட்டக்களப்பில் நடைபெறவுள்ள நிலையில் பேரணியில் வடக்கு மாகாணத்தில் இருந்து கலந்துகொள்பவர்களுக்குரிய பேருந்து ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் அழகராசா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
‘இலங்கையின் சுதந்திர நாள் – தமிழர்களுக்குக் கரிநாள்’ என்ற தொனிப்பொருளில், தமிழர்களின் அபிலாஷைகளான சுயநிர்ணயம், தமிழ்த் தேசியம், மரபுவழித் தாயகம் ஆகியவற்றைச் சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்தும் வகையில் வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி இடம்பெறும் எழுச்சிப் பேரணியின் நிறைவு நாள் நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.
இந்த எழுச்சி நிகழ்வுக்கு வடக்கு மாகாணத்தில் இருந்து கலந்துகொள்பவர்களுக்குரிய பேருந்து ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இன்று திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இருந்தும், கிளிநொச்சி – பரந்தன் பஸ் நிலையம் மற்றும் கிளிநொச்சி – புதிய பஸ் நிலையத்தில் இருந்தும், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் பேருந்து நிலையங்களில் இருந்தும் பேருந்துகள் செல்லவுள்ளன.
அந்தந்த மாவட்டங்களில் இருந்து செல்லவுள்ளோர் அருகிலுள்ள பேருந்து புறப்படும் இடங்களுக்குக் குறித்த நேரத்துக்குச் சென்று பேருந்தில் தங்களது பயணத்தைத் தொடர முடியும். மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் 0774819490 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் என்றுள்ளது
No comments: