News Just In

2/19/2023 05:44:00 AM

டிரக்கில் ஒளிந்து மரணமடைந்த புலம்பெயர் மக்கள்: வெளியான தகவல்




பல்கேரியாவில் கைவிடப்பட்ட டிரக்கில் 18 ஆப்கான் புலம்பெயர் மக்கள் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் 6 பேர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
52 புலம்பெயர் மக்கள்

பல்கேரியா தலைநகர் சோபியா அருகே வெள்ளிக்கிழமை குறித்த டிரக் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. டிரக்கில், ரகசிய அறை ஒன்றில் சுமார் 52 புலம்பெயர் மக்கள் ஒளிந்திருந்துள்ளனர்.

பலர் மயக்கமான நிலையிலும், சிலர் சடலமாகவும் மீட்கப்பட்டனர். இந்த நிலையில், அந்த டிரக்கின் சாரதி மற்றும் உதவியாளர் மீது பல்கேரியா பொலிசார் வழக்கு பதிந்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், மூச்சடைத்து, உயிருக்கு போராடிய புலம்பெயர் மக்கள் டிரக்கை நிறுத்த வேண்டும் என கேட்டு சத்தமிட்டுள்ளனர். ஆனால் அந்த சாரதி அதை கண்டுகொள்ளாமல் வாகனத்தை செலுத்தியதாக தெரியவந்துள்ளது.

கொத்தாக 18 பேர் மூச்ச  டைத்து மரணமடைந்த சம்பவம் பல்கேரிய மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து போர் மற்றும் வறுமை காரணமாக வெளியேறும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரை துச்சமாக மதித்து இதுபோன்ற ஆபத்தான பயணம் மேற்கொள்கிறார்கள்.

கடந்த ஆண்டுகளில் துருக்கியுடன் இணைந்து பல்கேரியாவும் அதிகரிக்கும் புலம்பெயர் மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளது. தற்போது இந்த 18 ஆப்கான் புலம்பெயர் மக்கள் டிரக்கினுள் மூச்சடைத்து மரணமடைத்துள்ளதாகவும், வலி மிகுந்த மரணத்தை அவர்கள் எதிர்கொண்டதாகவும் துணை தலைமை சட்டத்தரணி போரிஸ்லாவ் சரபோவ் தெரிவித்துள்ளார்.

சந்தை பொருட்கள் போல, அவர்கள் உயிருடன் மிஞ்சுவார்களா என்பதை உறுதி செய்யாமல் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தற்போது மருத்துவமனை சிகிச்சையில் இருக்கும் எஞ்சிய 34 புலம்பெயர் ஆப்கானியர்களும் ஆபத்து கட்டத்தை தாண்டியுள்ளதாகவும், குணமடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஐவர் தற்போது பொலிசாரிடம் சிக்கியுள்ளதாகவும், முக்கிய குற்றவாளி நாட்டைவிட்டு வெளியேறியிருக்கலாம் எனவும், ஐரோப்பாவில் எந்த நாட்டிலும் அவரை கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் போரிஸ்லாவ் சரபோவ் தெரிவித்துள்ளார்.

பொதுவாக ஆள்கடத்தல் குழுவானது துருக்கி, பல்கேரியா மற்றும் செர்பியா எல்லை ஊடாக புலம்பெயர் மக்களை ரகசியமாக கடத்தி செல்வதாகவும், அங்கிருந்து அவர்கள் பிரித்தானியா, ஜேர்மனி அல்லது பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது.

No comments: