News Just In

2/21/2023 06:44:00 PM

அனைவரும் இணைந்து செயல்பட வேண்டிய சூழ்நிலையில் இருக்க வேண்டும் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்




- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

சுற்றாடலைப் பாதுகாப்பது அனைத்து குடிமக்களின் தவிர்க்க முடியாத பொறுப்பாகும், ஆனால் சுற்றாடலை பாதுகாப்பதில் எவ்வாறு பங்களிப்பது என்பது குறித்து பலருக்கு சரியான புரிதல் இல்லை என்று சுற்றாடல் அமைச்சர் பொறியியலாளர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சில் நடைபெற்ற “பசுமை ரயில் நிலையங்கள் - 2023” நிகழ்ச்சித்திட்டம் குறித்து புகையிரத நிலைய அதிபர்களை விழிப்பூட்டும் நிகழ்ச்சியில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

சுற்றாடலின் அழிவு நேரடியாக காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும், அதனால் ஏற்படும் விளைவு ஒரு நாட்டின் பொருளாதாரத்திலும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே சுற்றாடலைப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும் , சுற்றாடலைப் பாதுகாக்க நாமனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

புகையிரத நிலையத்தை சுற்றாடல் நேயமுள்ள இடமாகவும் பயணிகளுக்கு வசதியான இடமாகவும் மாற்றுவதையும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதன் மூலம் சுற்றுலாத் துறைக்கு ஆதரவை வழங்குவதையும், சுற்றாடல்; மாசுபாட்டைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த “பசுமை ரயில் நிலையங்கள் - 2023” நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் புகையிரத போக்குவரத்தின் மூலமாகவும், கார்பன் தடத்தை குறைப்பதன் மூலமாகவும், பல நன்மைகளைப் பெற முடியும் என்று கௌரவ சுற்றாடல் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். சுற்றாடல்; அமைச்சு, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, இலங்கை புகையிரத திணைக்களம் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை ஆகியவை இணைந்து கழிவு முகாமைத்துவம், சக்தி சேமிப்பு மற்றும் புகையிரத நிலையங்களை பசுமையாக்குதல் ஆகிய முதன்மை நோக்கங்களுடன் “பசுமை ரயில் நிலையங்கள் - 2023” எனும் திட்டத்தை செயல்படுத்துகின்றன.

இந்த நிகழ்வில் வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ்.பத்திரகே மற்றும் புகையிரத நிலைய அதிபர்கள் உட்பட பல அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



No comments: