News Just In

11/15/2022 11:20:00 AM

தலைவர் அஷ்ரப்பை மதிக்கின்றேன் : அமைச்சர் டக்ளஸை தமிழ் சமூகம் சரியாக பயன்படுத்த தவறி விட்டது - சமாச தலைவர் லோகநாதன் ஆதங்கம்




நூருல் ஹுதா உமர்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தமிழ் சமூகம் சரியாக பயன்படுத்தவே இல்லை, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பின்னால் சென்று தறி கெட்டு நிற்கின்றது என்று அம்பாறை கல்முனை மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவுசங்க சமாசத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார்.

மல்வத்தை சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கத்தை புனரமைப்பு செய்யும் பொது கூட்டம் மல்வத்தை வளாகத்துக்கு அண்மையில் திங்கட்கிழமை இவரின் தலைமையில் இடம்பெற்றது. இதில் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் மார்க்கண்டு கமலரதன் பேராளராக கலந்து கொண்டார். புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு ஆவணங்கள் சம்பிரதாயபூர்வமாக சங்கத்தின் புதிய தலைவரிடம் கையளிக்கப்பட்டன. இதன்போது சமாச தலைவர் லோகநாதன் இங்கு பேசியவை,

அமைச்சரவை அமைச்சராக பதவி வகித்து வருகின்ற ஒரேயொரு தமிழர் டக்ளஸ் தேவானந்தா ஆவார். கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு அமைச்சரவை அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. வியாழேந்திரன், பிள்ளையான் ஆகியோர் இராஜாங்க அமைச்சர்கள்தான். கூட்டுறவு துறை இராஜாங்க அமைச்சராக வியாழேந்திரன் உள்ளார். இவர் மிகவும் துடிப்பானவ்ர். இவரை கூட்டுறவு துறை அமைச்சரவை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று ஜனாதிபதி ர்ணில் விக்கிரம்சிங்கவை எமது சமாசம் கோருகின்றது.

நான் தலைவர் அஷ்ரப்பை மதிக்கின்றேன். ஏனென்றால் அவர் தமிழ் மக்களுக்கும் சேவை ஆற்றி உள்ளார். குறிப்பாக 90 இல் இடம்பெற்ற இன வன்செயலில் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மல்வத்தை மக்களை மீள்குடியேற்றினார். இங்கு கட்டிடங்கள் அமைத்து தந்து உள்ளார். மல்வத்தை பிரதேச மக்களுக்கு தனியான பிரதேச சபை வேண்டும். நாம் இதை தமிழர்களுக்காக மாத்திரம் கோரவில்லை. இங்கு உள்ள முஸ்லிம், சிங்கள மக்களுக்காகவுமே கோரி வருகின்றோம். இது எமது மிக நீண்ட கால கோரிக்கை ஆகும்.

முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் அண்மையில் எல்லை நிர்ணய ஆணைக்குழு நியமிக்கப்பட்டு இருக்கின்றது. மல்வத்தை பிரதேச சபையை பெறுவதற்கு மகத்தான வாய்ப்பாக இதை பயன்படுத்த வேண்டும். ஆணைக்குழுவை வரவேற்று வாழ்த்துகின்ற அதே நேரம் மல்வத்தையில் தனியான பிரதேச சபையை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரி நிற்கின்றோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமும் கோருகின்றோம் என்றார்




No comments: