News Just In

10/05/2022 09:46:00 AM

அழிந்து கொண்டு போகும் எதிர்கால இளம் தலைமைகள் : தலைமைகளும், ஊர் நிர்வாகிகளும் மௌனம் கலைக்க வேண்டும்




நூருல் ஹுதா உமர்

இன்றைய சிறார்களே நாளைய தலைவர்கள், எமது சமூகத்தை வழி நாடாத்தும் தலைமைத்துவங்கள் உருவாகின்றன. ஆனால் நாம் இன்று அந்த தலைமைகளை இழந்து செல்கின்றோம், அதை கண்ணூடாக கண்டும் வாய்மூடி மௌனிகளாக இருந்து கொண்டிருக்கின்றோம். இன்று இளைஞர்கள் போதை வஸ்து பாவனையில் மூழ்கி அவர்களுடைய எதிர்காலத்தை அழித்துக் கொண்டு செல்கின்றனர் என முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சாரணருமான ஏ.எம்.எம். தில்சாத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், இன்று போதை வஸ்து பாவனை உச்ச நிலைக்கு சென்றுள்ளதாகவே அறிய முடிகிறது. இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் எமது பிரதேசம் எவ்வாறு திகழும் என்று நினைத்துப் பார்த்தால் உடல் முழுதும் நடுங்குகிறது. இன்று எமது இளைஞர்களை பாரிய சதி திட்டத்தில் எதிர்கால எமது பிரதேசத்தை முடக்கி சீரழித்து எம் சமூகத்தை அழித்து சுக்குநூறாக்கும் ஒரு திட்டமே இன்று எமது இளைஞர்களை குறி வைத்து போதை வஸ்து பாவனைக்கு அவர்களை அடிமையாக்கி இளைஞர் சமூகத்தை அழித்து ஓரம் கட்டும் ஒரு சதித்திட்ட செயலாகும்.

பிரதேச இளைஞர்களை கட்டுப்படுத்தும் திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கைநழுவி கொண்டே சென்று கொண்டிருக்கின்றது. நாம் இன்று வாய் திறக்கவில்லை என்றால் நாளை நாம் அனைவரும் தலையில் கை வைத்து வாயை மூட வேண்டிய ஒரு கட்டத்திற்கு தள்ளப்படுவோம். போதை வஸ்துக்கு அடிமையான பிள்ளைகளை வைத்துக்கொண்டு எத்தனையோ குடும்பங்கள் வெளியில் சொல்ல முடியாமல் அழுது புலம்பி நிம்மதி இழந்து துடித்துக் கொண்டிருக்கின்றது.

முக்கிய பதவிகளில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தலைமைகள் இறைவனுக்கு பயந்து எமது பிரதேச இளைஞர்கள் குறித்து சிந்தியுங்கள். இன்றைய நமது சமூகத்தில் உள்ள பொறுப்பு வாய்ந்த பொறுப்புதாரிகளே இன்று நாம் அதற்கு எதிராக களத்தில் இறங்கி கட்டுப்படுத்தாவிட்டால். உமது வீட்டுக்குள்ளும் நாளை இந்த போதை வஸ்து பாவனையின் பலன்களை எதிர் நோக்க வேண்டி வரும். மாற்று மதங்களில் அவர்களுடைய மத ஸ்தலங்களில் கடைபிடிக்கப்படும் மத ரீதியான சமூக ரீதியான கட்டுப்பாடுகளை ஏன் எமது மத ஸ்தலங்களில் நாம் இன்று கடைபிடிக்க முடியாமல் இந்த போதை வஸ்துக்கு எதிராக எமது ஒரு வீத எதிர்ப்பை கூட காட்டாமல் நாம் மௌனிகளாக எமது இளம் சமூகத்தை அளிப்பதற்கு துணை போகின்றோம் சற்று சிந்தியுங்கள்.

எமது பிரதேசத்திற்கு தனியான ஊர் பிரதேச சபை தேவை என்பதற்காக நாம் ஊரைக் கூட்டி வீதியில் இறங்கி பல நாட்களாக எதிர்ப்பு போராட்டம் நடத்த முடிந்த எமது நிர்வாகிகளே ஏன்? அந்தப் பிரதேச சபையை நாளை ஆளும் எம் இளம் தலைமைகளை பாதுகாப்பதற்காக இன்று உமக்கு வீதிகள் இறங்க முடியாமல் உள்ளதன் காரணம் தான் என்ன? அன்று எமது சபைக்கு எதிரானவர்களுக்கு எதிராக நாம் வீதியில் இறங்கி போராடி அவர்களை முற்றுகையிட்டு அவர்களுக்கு துரோகி பட்டம் வழங்க முடிந்தது என்றால். ஏன் இன்று எமது பிரதேசத்தை அழித்துக் கொண்டு செல்லும் நயவஞ்சகர்களுக்கு எதிராக உங்களால் களமிறங்க முடியாமல் உள்ளது. நாளை மறுமை இறைவனிடத்தில் நீங்கள் விட்ட ஒவ்வொரு பிழைக்கும் பதில் கூறியே ஆக வேண்டும்.

எனது சமூகத்தைப் பற்றி சிந்திக்காவிட்டாலும் பரவாயில்லை சற்று இறைவனுக்காக நீங்கள் இதற்கு எதிராக களம் இறங்கித்தான் ஆக வேண்டும் இல்லையென்றால். இந்தப் பாவம் உங்களது வம்சத்தையே அழித்துவிடும். இன்று சமூகத்தில் பொறுப்பு வாய்ந்த பதவிகள் உள்ள நிர்வாகிகளே! நீங்கள் இன்று இதற்கு எதிராக இறங்க வில்லை என்றால். நீங்கள் எமது சமூகத்துக்கு செய்யும் துரோகம் ஆகும். இந்த துரோகம் நாளை நீங்கள் உமது பிள்ளைகளுக்கு சேர்த்து வைத்து செல்லும் பாவமாகும். மறுமையில் இறைவனின் தண்டனையில் நீங்கள் தப்பிக்கவே முடியாது என்று தெரிவித்துள்ளார்.


No comments: