News Just In

10/04/2022 06:47:00 PM

பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய சாதனை மாணவர்களுக்கு மட்டக்களப்பு வர்த்தகர்கள் சங்கத்தினால் அதியுயர் கௌரவம்!!

மட்டக்களப்பு வர்த்தகர்கள் சங்கம் நடாத்தும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் 2021 வருடத்தில் உயர் பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான விசேட கௌரவிப்பு விழா மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் மிகப்பிரமாண்டமான முறையில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவரும் சமூக சேவையாளருமான தேச பந்து முத்துலிங்கம் செல்வராஜா தலைமையில் இடம்பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திசாநாயக்க மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், மாணவர்களுக்கான கௌரவிப்பினையும் வழங்கி வைத்துள்ளனர்.

பாரம்பரிய மங்கள வாத்திய இசை முழங்க அதிதிகள் மலர் மாலைகள் அணிவித்து வரவேற்கப்பட்டமையினை தொடர்ந்து, வரவேற்புரை, வரவேற்பு நடனம், தலைமையுரை, அதிதிகளின் விசேட உரைகள் இடம்பெற்று, கடந்த வருடம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள 163 மாணவர்களுக்கு இதன்போது பொன்னாடை போர்த்தி பதக்கங்கள் அணிவித்து நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், தேசிய ரீதியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞான துறையில் அகில இலங்கை ரீதியில் முதலாவது இடத்தை பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மட்டக்களப்பு புனித மிக்கேல். கல்லூரி தேசிய பாடசாலையின் மாணவன் தமிழ்வாணன் துவாரகேஷ், பௌதிக விஞ்ஞான துறையில் அகில இலங்கை மட்டத்தில் நான்காவது இடத்தையும் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் சாதித்த செங்கலடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் மாணவன் லோகிதன் கிசோபன் மற்றும் கதிரவெளி விக்னேஸ்வரா மாணவன் எஸ்.டினுகரன் ஆகியோர் இதன்போது விசேட நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.

நிகழ்விற்கு அதிதிகளாக கலந்துகொண்டவர்களை வர்த்தகர்கள் சங்கத்தினர் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், இச்சிறப்பான சாதனை மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வினை திறம்பட நிகழ்துவதற்கு காரணகர்த்தாவாக இருந்த மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவரும் சமூக சேவையாளருமான தேச பந்து எம்.செல்வராஜாவை வர்த்தக சங்கத்தினர் பொன்னாடை பேர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கெளரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்விற்கு கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் திருமதி.என்.புள்ளைநாயகம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வள்ளிபுரம் கனகசிங்கம், மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்டதுடன், விசேட அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமார், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.அகிலா கனகசூரியம், கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி, மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா மற்றும் பட்டிருப்பு வலயக்கல்விப் பிரதிப் பணிப்பாளர் (நிருவாகம்) செபமாலை மகேந்திரகுமார், பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜீ.சுகுணன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.கலாரஞ்ஜனி, கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் திருமதி. புளோரன்ஸ் பாரதி கெனடி, பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன், அதிபர்கள், ஆசிரியர்கள், சாதனை படைத்த மாணவர்களின் பெற்றோர், சமூக ஆர்வலர்கள், துறைசார் திணைக்கள உயரதிகாரிகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் என 500 இற்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(கல்லடி - சுதா)
















No comments: