News Just In

9/01/2022 10:55:00 AM

உயர்தர மாணவர்களுக்கு மின்குமிழ்கள் வழங்கி வைப்பு!




பைஷல் இஸ்மாயில் –

தற்போது நாட்டில் நிலவிவருகின்ற மின்துண்டிப்பு காரணமாக, இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. இதனால் அம்மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படக்கூடாதென்று குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.முபாறக் 4 ஆயிரம் ரூபாய் பெறுமதியான LED INTELLIGENT மின் குமிழ்களை அம்மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.

குச்சவெளி பிரதேச சபைகுட்பட்ட பகுதியில் உயர்தர வகுப்பில் கல்வி கற்றுவருகின்ற மாணவர்கள், மின்துண்டிப்பு நேரங்களில் தங்களின் கல்வி கற்றல் செயற்பாடுகளை தடையின்றி மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் முதற்கட்ட நடவடிக்கையாக புல்மோட்டை மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர்களுக்கும், புல்மோட்டை அறபாத் முஸ்லிம் வித்தியாலய மாணவர்களுக்கும் இந்த LED INTELLIGENT மின் குமிழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், மத்திய கல்லூரியின் முதல்வர் ஜெ.எம்.இக்பால், அறபாத் முஸ்லிம் வித்தியாலய அதிபர் ஏ.அப்துல் காதர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் ஏ.நப்ஸார் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் பாடசாலையின் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

குறிப்பாக, இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன் கருதியே இந்த LED INTELLIGENT மின் குமிழ்கள் சகல மாணவர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


No comments: