News Just In

6/24/2022 03:57:00 PM

அரசியல் தஞ்சம் கோரியவரின் வாக்குமூலம்! குற்றச்சாட்டை மறுக்கும் பிள்ளையான்






தமது கட்சியின் உறுப்பினர் ஒருவர் வெளியிட்டதாக கூறப்படும் செய்திகளை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் மறுத்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஒருவர் முக்கிய கொலைகள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் தகவல் வழங்கியுள்ளதாக கொழும்பின் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும், முன்னைய அரசாங்கத்துடன் தொடர்புடைய சிலர் தொடர்பில் கொழும்பிலும் வெளிநாட்டிலும் உள்ள சில முக்கிய இராஜதந்திர தூதரகங்களுக்கு தகவல் அளித்து வந்த குறித்த நபர், அண்மையில் உயிருக்கு அஞ்சி நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார்.


இதனையடுத்து அவர், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் அதிகாரிகளைச் சந்தித்து, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தொடர்புடைய குற்றங்கள் தொடர்பான வாக்குமூலங்களை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கொண்ட கொலைகள் பற்றிய விபரங்களையும் அவர் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மற்றும் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், குறித்த தகவல் வழங்குபவரால் அளிக்கப்பட்ட விபரங்கள் தொடர்பில் அடுத்து என்ன நடவடிக்கையை எடுப்பார்கள் என்பது தெரியவில்லை என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தி தொடர்பில்  செய்திச்சேவை ஒன்று  பிள்ளையானை தொடர்புக்கொண்டு வினவியபோதே, குறித்த ஊடகத்தில் வெளியான தகவல்களை மறுத்தார் அரசியல் தஞ்சம் கோருவதற்காக எவரும்,எதனையும் கூறலாம்.

இதனை பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இடம்பெற்றிருக்கிறது. எனவே அதுபோன்ற ஒரு நிகழ்வாக இந்த தகவலும் இருக்கலாம் என்று பிள்ளையான் குறிப்பிட்டார்.


No comments: