News Just In

6/27/2022 06:34:00 AM

உணவுப் பஞ்சத்தை எதிரகொள்ளத் தயாராகுங்கள் ; அரச காணிகளை வழங்கத் தயாராக உள்ளோம் : பிரதேச செயலாளர் (வாகரை)

எதிர்பார்க்கப்படும் உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ளத் தயாராகுங்கள். விவசாய உற்பத்திகளை மேற்கொள்வதற்கு அரச காணிகளை வழங்கத் தயாராக உள்ளோம் என மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் ஜி. அருணன் பொதுமக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பனிச்சங்கேணி, பால்சேனை, கதிரவெளி ஆகிய கிராமங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக தென்னங்கன்றுகளை வழங்கும் நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்), கொகாகோலா பவுண்டேஷன், இளைஞர் அபிவிருத்தி அகம் ஆகியவை கூட்டிணைந்து இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ள இந்தத் திட்டத்தில் தொடராக பயன் தரும் மரங்கள், பழ மரங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் தங்கராஜா திலீப்குமார் தலைமையில் நேற்று 26.06.2022 இடம்பெற்ற நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிரதேச செயலாளர் அருணன், இளைஞர் அபிவிருத்தி அகம் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுள்ள கிராமங்களில் தென்னை உட்பட நீண்டகால பயன் தரும் பழ மரங்கள், உப உணவுப் பயிர்கள் விநியோகம் ஆகிய திட்டங்கள் இயற்கைச் சூழலைப் பேணுவதற்கும் மக்கள் போஷணைச் சத்துள்ள உணவுகளைப் பெற்றுக் கொள்வதற்கும், பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்வதற்கும், உணவுப் பஞ்சத்தைக் குறைப்பதற்கும் உதவும்.

விவசாய உற்பத்திகளை மேற்கொள்வதற்கு இளைஞர் யுவதிகள் முன்வரவேண்டும். ஒரு இலட்சம் காணித் துண்டுகள் விநியோக விண்ணப்பத்திலும் இப்பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து மிகக் குறைந்த அளவிலான இளைஞர் யுவதிகளே விண்ணப்பித்திருந்தார்கள். எனவே இளைஞர் யுவதிகள் முன்வரும்பட்சத்தில் அந்த நோக்கத்திற்காக அரச காணிகளை வழங்க நாம் தயாராக உள்ளோம்” என்றார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலக அதிகாரிகள் இளைஞர் அபிவிருத்தி அகம் அமைப்பின் அலுவலர்கள் உட்பட பிரதேச பொது மக்களும் கலந்து கொண்டனர்.

.எச்.ஹுஸைன்

No comments: