News Just In

5/16/2022 06:21:00 AM

திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 15க்கும் அதிகமானோர் கைது

திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 15 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்திலேயே இவ்வாறு கைதுகள் நேற்று (15) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் வீடுகள் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரினால் வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்பட்டு சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கைதானவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் கருத்து தெரிவித்து சமூக செயற்பாட்டாளரும் இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் மாவட்ட செயலாளருமான ரொஷான் அக்மீமன இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

“திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில அதுக்கோரளவின் வீடு சேதமாக்கப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு பொலிஸாரினால் வரவழைக்கப்படும் இளைஞர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலையில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான அமைதி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் எனவும் இவ்வாறான கைதுகள் அரசின் சர்வாதிகாரத்தை வெளி காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் ஜனநாயகமான ஆட்சி ஒன்று அமைய வேண்டும் என இளைஞர் யுவதிகள் வீதிக்கு இறங்கி இவ்வாறான போராட்டத்தை முன்னெடுக்கும் இவ்வேளையில் இவ்வாறான கைகளை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச இவ்வாறான அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கை வைத்து தற்போது கடலின் நடுவில் ஒரு தீவில் மறைந்து இருப்பதாகவும் கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் இவ்வாறு சட்டவிரோத அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் இல்லாவிடின் இவர்கள் இருவரும் ஆளுக்கு ஒவ்வொரு தீவுகளில் மறைய வேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்றைய தினம் திருகோணமலை நகரின் சமூக செயற்பாட்டாளர் ஒருவரை உப்புவெளி பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் பெறுவதற்காக பொலிஸாரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும்” இதன்போது தெரிவித்துள்ளார்.

No comments: