ஈரானில் மதுபானம் அருந்திய பத்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் உற்பத்தி செய்யப்பட்ட மதுபானத்தை அருந்தியவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்பதுடன் மேலும் சிலர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரானில் மதுபானம் உற்பத்தி செய்தல், அருந்துதல் மற்றும் விற்பனை செய்தல் என்பனவற்றுக்கு முற்று முழுதான தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒரு பெண்ணும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானின் கரையோர நகரான பான்டர் அப்பாஸில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டில் உற்பத்தி செய்யப்பட்ட சட்டவிரோத மதுபானத்தை அருந்திய மேலும் 19 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோதமான முறையில் மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட எட்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் உற்பத்தி செய்யப்படும் மதுபானம் அருந்துவோருக்கு நிரந்தர பார்வை குறைபாடு, சிறுநீரகம் செயற்படாமை உள்ளிட்ட பல்வேறு ஆபத்துக்கள் ஏற்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments: