அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு காரணமாக தனது குடும்பத்தை வாழ வைக்க முடியாது எனத் தெரிவித்து பொகவந்தலாவ நகருக்கு அருகில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற ஒரு பிள்ளையின் தந்தை பொகவந்தலாவ காவல்துறையினரால் தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கேம்பியன் எல்டொப்ஸ் தோட்டத்தில் வசிக்கும் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான செல்வநாயகம் புவேந்தரன் என்பவர் 80 மீற்றர் உயரமான கோபுரத்தில் கடந்த 4 ஆம் திகதி மாலை 6 மணியளவில் ஏறியுள்ளதாக அப்பகுதி மக்கள் பொகவந்தலாவ காவல்துறைக்கு அறிவித்துள்ளனர்.
உடனடியாக செயற்பட்ட பொகவந்தலாவ காவல்துறை உத்தியோகத்தர்கள் தொலைத்தொடர்பு கோபுரத்தில் நின்றிருந்தவரின் மனைவியை ஸ்தலத்திற்கு வரவழைத்து, கணவனை கீழே இறங்குமாறு பல தடவைகள் ஒலிபெருக்கியில் முறையிட்டு இறக்கியுள்ளனர்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் சுமார் 1 வயதுடைய தனது குழந்தைக்கு பால் மா கூட வாங்க முடியாத நிலையிலேயே தற்கொலைக்கு முயன்றதாக செல்வநாயகம் புவேந்திரன் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
No comments: