அதிபர், ஆசிரியர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள் மற்றும் பிரிவெனா ஆசிரியர்கள் ஏப்ரல் 28ஆம் திகதி பாரிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் இதுதொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், தற்போது நாட்டில் உருவெடுத்து நீண்டு செல்லும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியினால் அனைத்து வேலை செய்யும் மக்கள் உட்பட அனைத்து இலங்கையரும் மோசமான பிரச்சினைகள் பலவற்றிற்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளமையை கூறி தெளிவுபடுத்த வேண்டிய அவசியமில்லை. இத் துர்ப்பாக்கிய நிலைக்கு காரணம் ஜனாதிபதி கோட்டபாய உட்பட தற்போதைய முழு அரசாங்கமே எனக்கூறி மக்கள் நாடு முழுவதும் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
அரசு ஊழியர்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட அதிபர், ஆசிரியர் மற்றும் பிரிவெனா ஆசிரியர்கள் இருப்பதுடன் அவர்கள் சேவைக்கு சமூகம் அளித்தல், சேவை தளத்திலிருந்து வீடு செல்லல் அத்துடன் பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு வருகின்ற போது போக்குவரத்திற்கான எரிபொருள் தட்டுப்பாடு, விலையேற்றம் மற்றும்அரசு மற்றும் தனியார் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றமை போன்ற பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளமை தொடர்பாக 2022.04.20 திகதி தங்களுக்கு கடிதம் மூலமாக அறியப் படுத்தியும் அதற்கான தீர்வு கிடைக்காமையினால் ஏப்ரல் 25ஆம் திகதி சுகயீன விடுமுறை போராட்டத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்புக்கு நேர்ந்தது.
நாட்டில் தற்போது நிலவுகின்ற அரசியல் பொருளாதார நெருக்கடியை உருவாக்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட முழு அரசாங்கத்தையும் பதவி விலக கோரி அரச, அரச ஆதிக்கம் உடைய நிறுவனம் மற்றும் தனியார், பெருந்தோட்டம் உட்பட சகல துறையைச் சேர்ந்த வேலை செய்யும் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து 2022.04.28 திகதி அன்று பாரிய தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அதற்கமைய அதிபர், ஆசிரியர் ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் பிரிவெனா ஆசிரியர்கள் 2022.04.28 ம் திகதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக அதன் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
S. Pradeep
No comments: