News Just In

1/19/2022 09:37:00 AM

ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை ஏமாற்றத்தை தருகின்றது ; விருந்துபசாரத்தில் கலந்துகொள்ளமாட்டோம் - சம்பந்தன்


ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையானது மிக மோசமான உரை எனவும், எமது கரிசனைகள் குறித்து எதனையுமே கருத்தில் கொள்ளாத ஜனாதிபதியின் உரை ஏமாற்றத்தை தருவதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் கடும் தொனியில் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உரை தொடர்பில் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களிடமும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாம் அமர்வுகளை நேற்று ஆரம்பித்துவைத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது கொள்கை விளக்கவுரையையும் ஆற்றியிருந்தார். அதன் பின்னர் சபை ஒத்திவைக்கப்பட்டிருந்த வேளையில் பாராளுமன்றத்தின் முதலாம் மாடியில் உள்ள நூலகத்தின் வாயில் அருகே நின்றுக்கொண்டிருந்த சம்பந்தன் அவ்வழியால் தேநீர் விருந்துபசாரத்திற்கு சென்றுகொண்டிருந்த நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை கண்டதும் அழைத்திருந்தார்.

சம்பந்தனின் அழைப்பை அடுத்து அவருகே வந்த நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ சம்பந்தனை தேநீர் விருந்துக்கு அழைத்தபோது, சம்பந்தன் ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரையை கடும் தொனியில் விமர்சித்துள்ளார்.

பல விடயங்களை எதிர்பார்த்த போதும் எமது கரிசனைகள் எதனையும் கருத்தில் கொள்ளாது மோசமான உரையாகவே இது அமைந்துள்ளது. இது எமக்கு ஏமாற்றத்தை தருவதாகவும் நிதி அமைச்சரிடம் தெரிவித்துள்ளதுடன், ஜனாதிபதியின் தேநீர் விருந்துபசார நிகழ்வில் நாம் கலந்துகொள்ள மாட்டோம் என்பதை ஜனாதிபதியிடம் கூறுங்கள் எனவும் நிதி அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவறையில் கூட்டமைப்பின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த ஆர். சம்பந்தன் அதன்போதும் ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை குறித்து தனது அதிர்ப்தியை வெளிப்படுத்தியுள்ளதுடன் 'குப்பை உரை' எனவும் விமர்சித்துள்ளார்.

No comments: