News Just In

12/09/2021 07:04:00 PM

வசந்த கரன்னாகொடவிற்கு ஆளுநர் பதவி! - மனோ கணேசனும் எதிர்ப்பு!

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு ஆளுநர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.பேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மீது, இறுதி யுத்தம் நடந்த 2008, 2009 காலத்தில், கொழும்பில் வசதி படைத்த தமிழ் குடும்ப இளைஞர்கள் 11 பேரை, கப்பம் பெறுவதற்காக, வெள்ளை வேன் மூலம் கடத்தி, கொலை செய்ததாக, குற்றம்சாட்டப்பட்டு, வழக்கு நடந்தது.2008, 2009 வேளையில் எனது தலைமையிலான “மக்கள் கண்காணிப்பு குழு” இந்த கொடுமையை பதிவு செய்து உலகிற்கு அறிவித்தது. இதற்காக எனக்கும் அச்சுறுத்தல் பரிசாக கிடைத்தது. “வந்து சுட்டு விட்டு போங்கடா” என நான் சொன்னேன்.

கடத்தப்பட்ட இளைஞர்களின் உடல்கள் கூட கிடைக்கவில்லை. காணாமல் போன பிள்ளைகளின் தாய்மார்கள் அழுத அழுகை இன்னமும் என் நெஞ்சில் ஒலிக்கிறது. அன்றைய போராட்டங்கள் மனதில் நிழலாடுகின்றது.

கொழும்பு எம்பியாக, மக்கள் கண்காணிப்பு குழு அழைப்பாளராக - நான் மற்றும் ரவிராஜ், சிறிதுங்க, விக்கிரமபாகு, பிரியாணி ஆகியோர் அச்சறுத்தல்களுக்கு மத்தியில் பலரை காப்பாற்றினோம். பல கடத்தல்களை தடுத்து நிறுத்தினோம்.

எம்மையும் மீறி பல நடந்தன. வெள்ளை வான் கடத்தல்கள் அரசியல் காரணங்களுக்காக ஆரம்பித்து இது போன்ற கப்பம் பெறவேண்டி நிகழ்ந்தன. 2019ம் வருடத்தில் சட்டபூர்வமாக வசந்த கரன்னாகொட மீது சாட்டப்பட்ட இந்த குற்றச்சாட்டு மரண தண்டனைக்குரிய குற்றமாகும்.

இன்று, இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த பின், கடந்த மாதம் அவர் மீதான குற்றச்சாட்டுகளையும், வழக்கையும் சட்டமா அதிபர் வாபஸ் பெற்றார். வசந்த கரன்னாகொட சுதந்திர மனிதனாக நடமாடுகிறார். இன்று அவரது “சாதனையை” பாராட்டி "முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட, வடமேல் மாகாண ஆளுநராக" நியமிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

No comments: