News Just In

7/10/2021 02:53:00 PM

கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஓர் கருவியாக கொரோனா வைரஸ் பரவலைப் பயன்படுத்துவதாக சர்வதேச மன்னிப்புச்சபை குற்றச்சாட்டு...!!


இலங்கையில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தெரிவுசெய்யப்பட்ட அடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டம் பிரயோகிக்கப்பட்டிருப்பதானது, கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஓர் கருவியாக அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவலைப் பயன்படுத்துவதை வெளிப்படுத்தியிருக்கிறது என்று சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மறு அறிவித்தல்வரை தடை செய்யப்படுவதாக கடந்த செவ்வாய்கிழமை பொலிஸ் தலைமையகத்தினால் அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த புதன்கிழமையிலிருந்து பலதரப்பட்ட கோரிக்கைகள் மற்றும் உரிமைகளுக்காகப் போராடுவோரைக் கைது செய்யும் நடவடிக்கைகளைப் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக கடந்த வியாழக்கிழமை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களைப் பொலிஸார் தூக்கிச்சென்று பொலிஸ் வண்டிகளில் ஏற்றும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டன.

அதுமாத்திரமன்றி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுதல் தடை செய்யப்பட்டுள்ளமையானது, பொதுமக்களின் கருத்துச்சுதந்திரத்தையும் அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை விமர்சிக்கும் சுதந்திரத்தையும் பறிப்பதாக அமையும் என்று பல்வேறு தரப்பினராலும் கண்டனங்கள் வெளியிடப்பட்டிருந்தது. இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச மன்னிப்புச்சபையினால் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டம் பிரயோகிக்கப்பட்டிருப்பதானது, இலங்கை அரசாங்கம் கருத்துச்சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலை ஓர் கருவியாகப் பயன்படுத்துவதை வெளிப்படுத்தியிருக்கின்றது.

நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் புதிய சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை வெளியிடுவதாக இருந்தால், எந்தவொரு தரப்பினரையும் அடக்குமுறைக்கு உட்படுத்தாத வகையில் அனைவருக்கும் பொதுவானதாக அவ்வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும் என்று மன்னிப்புச்சபை அதன் டுவிட்டர் பதிவில் வலியுறுத்தியிருக்கின்றது.

No comments: