News Just In

5/18/2021 02:49:00 PM

மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை- வர்த்தக நிலையங்களை மூடுமாறும் அறிவிப்பு...!!


மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக ஐந்து கிராமசேவகர் பிரிவுககளை முற்றாக முடக்குவதற்கு மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய பாலமீன்மடு, சின்ன ஊரணி, கல்லடி வேலூர், பூநொச்சிமுனை, திருச்செந்தூர் ஆகிய ஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் இவ்வாறு முடக்கப்படவுள்ளது.

குறித்த கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்படும் நிலையில் மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் உள்ள அத்தியாவசிய சேவைகளை வழங்குகின்ற வியாபார நிலையங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட வேண்டும் என மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கமைய, பழக்கடைகள், மருந்தகங்கள், வெதுப்பகங்கள், உணவகங்கள் தவிர்ந்த அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறும், திறக்கப்படும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், திறக்க அனுமதி வழங்கப்பட்ட வர்த்தக நிலையங்களில் கொரோனா தடுப்பு செயலணியாலும் சுகாதார துறையினராலும் முன்வைக்கப்படும் சட்டதிட்டங்களை பின்பற்றி வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவ்வாறு செயற்பாடாத வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் குறித்த வர்த்தக நிலையங்களை மூட வேண்டி வரும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், பொதுமக்கள் போதிய ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் என்றும் தேவையில்லாது வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், முகக்கவசங்களை அணியுமாறும், கூட்டமாக செயற்படுவதை தவிர்க்குமாறும் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments: