News Just In

5/15/2021 01:34:00 PM

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் கொரோனா நோயாளிகளை குணப்படுத்துவதற்காக தற்காலிகமாக அமைக்கப்படவுள்ள வைத்தியசாலைக்கான இடத்தை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்!!


மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் கொவிட் சூழ்நிலையினைக் கருத்திற்கொண்டு சுகாதார அமைச்சரின் ஆலோசனைக்கு அமைவாக மாவட்டத்தில் 1000 கட்டில்களை தயார்படுத்தும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 
இதனடிப்படையில் பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்பு செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஸ அவர்களின் சிந்தனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் முன்மொழிவுக்கு அமைய ஏறாவூர்ப் பற்று கரடியனாறு வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்படவுள்ள கொரோனா நோயாளிகளுக்கான அனைத்து வசதிகளுடன் கூடிய தற்காலிக வைத்தியசாலையை அமைப்பதற்கான வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று 14.05.2021 திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் 100 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்ட தற்காலிக வைத்தியசாலையை அமைப்பதற்கான முன்னாயத்தங்கள் தொடர்பாகவும், மின்சார வசதிகள், குடிநீர் வசதிகள் மற்றும் மலசல கூட வசதிகள் உள்ளிட்ட மேலும் பல தேவைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் இன்று (15) ஆந் திகதி இது தொடர்பான கள விஜயமொன்றினை மேற்கொள்வதன் ஊடாக ஏனைய நடவடிக்கைகளை முன்னெடுக்கலாமென இராஜாங்க அமைச்சரினால் ஆலோசனை வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் குறித்த தற்காலிக வைத்தியசாலை அமையப்பெறவுள்ள கரடியனாறு வைத்தியசாலைக்கு இராஜாங்க அமைச்சர் தலைமையிலான குழுவினர் சென்றிருந்ததுடன், விடயம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது மட்டுமல்லாது இதன் ஆரம்பக்கட்ட வே லைகளைகளும் இராஜாங்க அமைசரின் ஆலோசனைக்கு அமைவாக ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

இதன்போது மாவட்ட செயலாளரும் மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரன், பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் தமிழ் பிரதேசங்களுக்கான அபிவிருத்திக் குழுக்களின் பிரதித் தலைவருமான பா.சந்திரகுமார், 231 வது படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர் வீ.எம்.என்.எட்டியாராச்சி,
ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சர்வானந்தன், கிழக்கு மாகாண கொவிட் செயலணியின் இணைப்பாளர் வைத்திய கலாநிதி அச்சுதன், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெட்ணம், உள்ளிட்ட துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.









No comments: