News Just In

5/31/2021 07:22:00 PM

மட்டக்களப்பு- வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சை பிரிவு திறப்பு...!!


எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் ஒரு பகுதியை கொரோனா சிகிச்சை பிரிவாக திறந்து வைக்கும் நிகழ்வு இன்று திங்கட்;கிழமை இடம்பெற்றது.

கொவிட் சூழ்நிலையினைக் கருத்திற்கொண்டு அரசின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் 1000 கட்டில்களை தயார்படுத்தும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஐம்பத்தி நான்கு கட்டில்களைக் கொண்டதான கொரோனா நோயாளிகளுக்கான கொரோனா விடுதி அமைக்கப்பட்டு பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் இணைந்து மத அனுஷ்டானங்களுடன் உத்தியோக பூர்வமாக திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் மதகுருமார்கள், மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே.கருணாகரன், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.ஆர்.எம்.தௌபீக், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எம்.அன்சார், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி.க.கலாரஞ்சனி, இராணுவ தரப்பு உயரதிகாரிகள், வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர்கள், வைத்தியட்சகர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச செயலாளர் உள்ளிட்ட துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து காணப்படும் நிலையில் நான்காவது கொரோனா சிகிச்சை பிரிவு திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கரடினாறு, காத்தான்குடி, பெரியகல்லாறு ஆகிய வைத்தியசாலைகளில் கொரோனா சிகிச்சை விடுதி இயங்கி வருகின்றது.















No comments: