News Just In

4/04/2021 11:02:00 AM

மோட்டார் சைக்கிளில் லொறி மோதியதில் பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!!


வீதியின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் லொறியொன்று மோதியதில் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு (04) பழைய கெஸ்பேவ வீதியில் உள்ள கட்டிய சந்தியில் இருந்து தெல்கந்த நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் மருதானை பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த புளத்சிங்கள பகுதியில் வசிக்கும் 47 வயது பொலிஸ் சார்ஜென்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், மார்ச் 31 முதல் ஏப்ரல் 2 வரையிலான காலகட்டத்தில் வீதியில் பயன்பாட்டிற்கு தகுதியற்ற 450 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள்களால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க இந்த சிறப்பு திட்டம் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த காலகட்டத்தில், குடிபோதையில் வாகனம் செலுத்திய 398 பேருக்கும், ஆபத்தான வகையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய 139 பேருக்கும், அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தி 108 பேருக்கும், தலைக்கவசம் இல்லாத 1,977 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கும், உரிம மீறல்களில் ஈடுபட்ட 1,303 நபர்களுக்கும் மற்றும் போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் 2,806 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

மேலும், வேறு குற்றங்கள் தொடர்பில் 6,186 பேருக்கு மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊகட பேச்சாளர் தெரிவித்தார்.

அதன்படி, குறித்த காலகட்டத்தில் பெறப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 13,320 ஆகும்.

இந்த நடவடிக்கையின் நோக்கம் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதல்ல எனவும் அவர்களைப் பாதுகாப்பதும், மோட்டார் சைக்கிள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதும் ஆகும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

No comments: