ஏறாவூரில் கொரோனா வைரஸினால் உயிரிழந்த முதலாவது நபரான கல்வி அதிகாரிக்காக இரங்கலும் பிரார்த்தனையும் கத்தமுல் குர்ஆன் ஓதலும் நினைவுரைகளும் இடம்பெற்றன.
ஏறாவூர் கூட்டுறவுச் சங்கப் பணிப்பாளர் சபைத் தலைவர் எம்.எல். அப்துல் லத்தீப் தலைமையில் ஏறாவூர் கூட்டுறவுச் சங்க கூட்டுறவு வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை 30.03.2021 நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளில் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க பொதுமுகாமையாளர் எம்.எச்.எம் சனூஸ் பணியாளர்கள் உலமாக்கள், மறைந்த கல்வி அதிகாரி கலீலுர்ரஹ்மானின் குடும்ப உறுப்பினர்கள் உற்றார் உறவினர்கள் மத்ரசா மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய ஏறாவூர் கூட்டுறவுச் சங்கப் பணிப்பாளர் சபைத் தலைவர் அப்துல் லத்தீப் மறைந்த கலீலுர்ரஹ்மான் உதவிக் கலவிப் பணிப்பாளராக இருந்த அதே சமயம் கூட்டுறவுச் சங்க பொதுச் சபையின் நீண்டகால உறுப்பினராகவும் இயக்குநர் சபை உறுப்பினராகவும் இருந்ததோடல்லாமல் அவர் மரணிக்கும் வரை பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்தவராகும்.
தன்னுடைய கடமையை திறம்படச் செய்து முடிப்பதில் அவர் ஆற்றல் பெற்றவராக விளங்கினார்.
அவரது சமூக சேவைப் பணிகளின் ஊடாக பல ஏழைகள் நன்மை பெற்றிருக்கிற்hர்கள்.
எல்லோருடனும் சகஜமாகப் பழகுகின்ற ஒரு நல்ல அன்பர் அவர்.
ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் வளர்ச்சியிலே காலஞ்சென்ற கலீலுர் ரஹ்மானின் பங்கு இருந்திருக்கின்றது.
அதேபோல எங்களுடைய எந்தப் பொது நிகழ்வுகளிலும் அவருடைய குரல் ஒலிக்கின்ற அதிகமான சந்தர்ப்பங்களை அவதானித்திருக்க முடியும். கூட்டுறவுச் சங்கத்தின் எழுச்சிக் கீதம் பாடுவதில் கூட அவரது பங்களிப்பு இருந்திருக்கின்றது.
அப்படியான ஒருவரை தற்சயமயம் ஏற்பட்டுள்ள உலகளாவிய வைரஸ் தொற்றின் காரணமாக நாம் இழந்து போய் நிற்கின்றோம்.
எல்லோரையும் நலம் விசாரிக்கின்ற சிறந்த இரக்க மனோபாவம் அவரிடம் இருந்ததினால் இந்த நோயை அவர் எங்கிருந்து தொற்றிக் கொண்டார் என்பது கேள்விக் குறியாகவே இருந்து கொண்டிருக்கின்றது.
அவரது மறைவினால் ஆறாத் துயரில் மூழ்கியிருக்கும் அவரது குடும்பத்தவர்கள் உட்பட மற்றுமுள்ள அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.” என்றார்.
No comments: