News Just In

3/30/2021 09:05:00 AM

நீர்த்தேக்கத்தில் கடந்த 25 ஆம் திகதி மீட்கப்பட்ட குடும்ப பெண்ணின் சடலம் தற்கொலை அல்ல, கொலை- பொலிஸார் தெரிவிப்பு!!


தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலைவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் கடந்த 25 ஆம் திகதி மீட்கப்பட்ட குடும்ப பெண்ணின் சடலம் தற்கொலை அல்ல, கொலை என அக்கரபத்தனை பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

இவ்வாறு கொலை செய்யப்பட்ட பெண், அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டொரிடன் தோட்டத்தைச் சேர்ந்த வனராஜா சித்தரவள்ளி (28 வயது) எனவும், அவர் 2 பிள்ளைகளின் தாய் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து தலவாக்கலை மற்றும் அக்கரபத்தனை பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் கைரேகை அடையாளப் பரிவினர் விசாரணை மேற்கொள்வதற்காக வீட்டுக்கு செல்லும் போது குறித்த சந்தேக நபரான கணவன் வீட்டை விட்டு ஓடியுள்ளார். அதனை தொடர்ந்து கணவன் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் நேற்று அவரை கைது செய்து புலன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதன் போது கூலி வாகன சாரதியாக வேலை செய்யும் குறித்த நபர் வேலை செய்து விட்டு கடந்த 23 ஆம் திகதி வீட்டுக்கு சென்றதாகவும் அதன் போது தனக்கு தன்னுடைய மனைவிக்கும் சண்டை ஏற்பட்டதாகவும், மனைவி ஒருவருடன் உள்ள தொடர்பு காரணமாகவே குறித்த சண்டை ஏற்பட்டதாகவும், அதனால் தான் தாக்கியதில் மனைவி மரணம் அடைந்ததாகவும் அதனை தொடர்ந்து மனைவியை வீட்டில் பூட்டி வைத்து விட்டு இரண்டு பிள்ளைகளையும் தனது தாய் தந்தையர்களிடம் ஒப்படைத்து விட்டு வழமை போன்று வாகனம் ஓடியதாகவும் கணவன் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் இதில் இருந்து தப்ப வேண்டும் என்பதற்காக இரவு 11 மணி அளவில் மனைவியின் சடலத்தினை ஏற்றிக்கொண்டு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் போட்டதாகவும், தான் கொலை செய்ய வேண்டும் என்று தாக்கவில்லை என்றும் இது தற்செயலாக நடந்தது என்றும் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையிலும் தாக்குதல் காரணமாக இந்த பெண் இறந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டதனை தொடர்ந்து கணவனான சந்தேக நபர் நுவரெலியா நீதிமன்றத்தில் இன்று (29) ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பாக சடலனத்தினை கொண்டு செல்ல பயன்படுத்திய வாகனமும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரபத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





No comments: