News Just In

2/19/2021 08:32:00 PM

வர்த்தக சமூகத்தினதும், பொதுமக்களினதும் திருப்தியே மாநகர சபையின் வெற்றியாகும் - மாநகர ஆணையாளர்!!


வர்த்தக சமூகம் பொதுமக்களும் இணைந்த கலந்துரையாடல் மாநகர சபையின் இலக்கு நோக்கிய செயற்பாட்டிற்கு இன்றியமையாததாகும். இந்த இரண்டு தரப்பாரின் திருப்தியே மாநகர சபையின் வெற்றியாகும் என மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா. தயாபரன் தெரிவித்தார்.

இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தினால் பொது, தனியார் சம்பாசனையை ஏற்படுத்தல் எனும் கருப்பொருளில் மட்டக்களப்பு மாநகர சபைக்கும் வர்த்தக சமுகத்தினருக்கும் இடையிலான தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்ட கலந்துரையாடலானது இன்று (19.02.2021) காலை நகர மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
 
இது தொடர்பில் மேலும்கருத்து தெரிவித்த அவர், பொதுமக்கள் மாநகர சபையிடமிருந்து எதிர்பார்க்கும் சேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற நாம் பாடுபடுகின்றோம். அதே போன்று பொது மக்களும் வர்த்தக சமூகமும் சபை நடவடிக்கைகற்கு ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும். திண்மக் கழிவுகளை அகற்றுவதில் எமக்கு பாரிய பிரச்சினை உருவாகியுள்ளது. தரம்பிரிக்கப்படாத கழிவுகளை சேகரிக்க வேண்டாம் என கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களும் உத்தரவிட்டுள்ளார். ஆனால் மக்கள் அவ்வாறு செய்வதில்லை.

வீதியோர வியாபாரம் பல விபத்துகளுக்கு காரணமாகவுள்ளது. ஆனால் அவற்றை தடை செய்ய மக்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை. இரண்டு தரப்பினரும் ஒரே பாதையில் பயணித்தால் சிறந்த நகரை கட்டி எழுப்ப முடியும் எனவும் குறிப்பிட்டார்.

மாநகர நிர்வாக எல்லைக்குள் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொர்பிலும், இது தொடர்பில் வர்த்தக சங்க பிரதிநிதிகளின் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் உள்வாங்கி உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் தொடர்பிலும் இக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.

அத்துடன் வர்த்தக சமுகத்தினால் ஆற்றக் கூடிய சமூகப் பொறுப்பு மிக்க பணிகள் மற்றும் மாநகர சபையின் அபிவிருத்தி செயற்பாடுகளில் இருக்க வேண்டிய கடப்பாடுகள் தொடர்பிலும் இங்கு வளவாளராக கலந்துகொண்ட இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தினத்தின் சிரேஷ்ட செயற்றிட்ட முகாமையாளர் பிரதீப் பெருமாள் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டன.

இன் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், மாநகர ஆணையாளர் மா.தயாபரன், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட பணிப்பாளர் சார்லஸ் சசிதரன், மட்டக்களப்பு வர்த்த சங்கத்தின் தலைவர் செல்வராஜா உட்பட பிரதேச வர்த்தகர்கள், வியாபார சமுகத்தினர், மட்டக்களப்பு மாநகர சபையின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.







No comments: