
இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தினால் பொது மற்றும் தனியார் சம்பாசனையை ஏற்படுத்தல் எனும் கருப்பொருளில் மட்டக்களப்பு மாநகர சபைக்கும் வர்த்தக சமுகத்தினருக்கும் இடையிலான தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்ட கலந்துரையாடலானது இன்று (19.02.2021) காலை மாநகர சபை மண்டபத்தில் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் வர்த்தக சங்க பிரதிநிதிகளின் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் கேட்டு அறிந்து கொண்டதுடன் குறித்த நபர்களின் கருத்துக்களை உள்வாங்கி உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
அத்துடன் வர்த்தக சமுகத்தினால் ஆற்றக் கூடிய சமூகப் பொறுப்பு மிக்க பணிகள் மற்றும் மாநகர சபையின் அபிவிருத்தி செயற்பாடுகளில் இருக்க வேண்டிய கடப்பாடுகள் தொடர்பிலும் இங்கு வளவாளர்களால் கருத்துக்களை முன்வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மாநகர ஆணையாளர் மா.தயாபரன், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட பணிப்பாளர் சார்லஸ் சசிதரன், மட்டக்களப்பு வர்த்த சங்கத்தின் தலைவர் செல்வராஜா உட்பட பிரதேச வர்த்தகர்கள், வியாபார சமுகத்தினர், மட்டக்களப்பு மாநகர சபையின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.











No comments: