News Just In

1/09/2021 03:07:00 PM

உள்ளூர் திரைப்படத் துறையை பாதுகாப்பதற்கு பிரதமரின் தலையீட்டுடன் ஈராண்டு வேலைத்திட்டம்!!

கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் உள்ளூர் சினிமா துறையை பாதுகாப்பதற்கு அரச தலையீட்டுடன் ஈராண்டு காலத்திற்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பது தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (2021.01.08) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

திரைப்பட தயாரிப்பு மன்றம், இலங்கை சினிமா இயக்குனர்களின் மன்றம், உள்ளூர் சினிமா கலைஞர்களின் கூட்டணி மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் குறித்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

கொவிட்-19 நெருக்கடிக்கு மத்தியில் திரைப்படத்துறை மிகவும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக திரைப்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் பிரதமருக்கு தெளிவுபடுத்தினர்.

அதன்போது 2021-2023 ஆம் ஆண்டின் பிரபல 25 திரைப்படங்களை திரையிடுவது குறித்தும், இந்த சவால்மிகுந்த காலப்பகுதியில் உள்ளூர் திரைப்படத் துறையை மேம்படுத்துவதற்கான நடைமுறை வேலைத்திட்டத்துடன் திரையரங்குகளின் தற்போதைய நிலை குறித்தும் பிரதமருக்கு எடுத்துரைக்கப்பட்டது.

திரையரங்கு உரிமையாளர்களின் மின்சார கட்டணத்தை அலகிடும் போது தொழில் வகை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு அக்கட்டணத்தை முன்னோக்கி கொண்டு செல்லல், பொழுதுபோக்கு வரியை ஈராண்டு காலத்திற்கு 5 வீதம் வரை குறைத்தல், விநியோக கட்டணங்களை நீக்குதல் அல்லது குறைத்தல், இது தொடர்பாக முடிவுகளை எடுக்க சிறப்புக் குழுவை நியமித்தல், திரைப்படத் தயாரிப்புக்கு 4 அல்லது 6 சதவீத வட்டிக்கு அரசு வங்கிகளிடமிருந்து கடன் பெறல், சலுகை அடிப்படையில் அரச மற்றும் அனைத்து ஊடகங்களிலும் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளல் என்பன குறித்து மேற்படி சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த திட்டங்கள் தொடர்பில் அந்தந்த நிறுவனங்கள் மற்றும் துறைகளுடன் ஆலோசித்து முடிவுகளை எடுக்குமாறு பிரதமர் அறிவுறுத்தினார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் துறைகளை தெளிவுபடுத்தி எதிர்காலத்தில் இந்த சலுகைகளை அமுல்படுத்துவது தொடர்பாக இறுதி முடிவுகள் எடுக்கப்படும்.

திரைப்பட தயாரிப்பாளராக திரு.பந்துல குணவர்தன அவர்களும், திரைப்பட இயக்குநராக அமைச்சர் சரத் வீரசேகர அவர்களும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

குறித்த சந்திப்பின்போது இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடகொட, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷ, நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, பிரதமரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட, தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி ஜயந்த தர்மதாச உள்ளிட்ட திரைப்படக் கழக இயக்குநர்கள் குழு, இலங்கை திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் கலாநிதி சோமரத்ன திஸாநாயக்க, இலங்கை திரைப்பட கண்காட்சி சங்கத்தின் தலைவர் அனுராதா பீ ரெகவ, இலங்கை திரைப்பட தயாரிப்பாளர்கள் மன்றத்தின் தலைவர் ரசித ஜினசேன உள்ளிட்ட அந்தந்த சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல கலைஞர்களும் கலந்து கொண்டனர்.









No comments: