News Just In

5/17/2020 10:02:00 PM

மட்டு மாநகர சபையால் தொழில் பாதிப்புற்ற இளைஞர்களுக்கு ஆரம்பிக்கப்படவுள்ள "இளைஞர் பண்ணைகள்"


கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக உலகம் பூராக தொழில் துறைகள் முடங்கி காணப்படுகின்றன, பெரும்பாலும் தனியார் துறையில் கடமை புரிந்த ஊழியர்களின் நிலை பெரும் சவாலுக்கு உள்ளாகியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலும் தனியார் நிறுவனங்களில் தொழில் புரிந்த இளைஞர்கள் வருமானம் இல்லாமல் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

தொழில் பாதிப்புற்ற இளைஞர்களுக்கு உதவும் பொருட்டு மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்களால் "இளைஞர் பண்ணைகள்" ஆரம்பிப்பது தொடர்பான முன்மொழிவானது மட்டக்களப்பு மாநகர சபையின் 33 ஆவது சபை அமர்வில் முன்வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர எல்லையினுள் காணப்படும் மாநகர சபைக்கு சொந்தமான காணிகளில் இப் பண்ணைகளை ஆரம்பிக்க ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.

அரச சார்பற்ற அமைப்புக்களின் அனுசரணையில் தொழில் பாதிப்புற்று இருக்கும் இளைஞர்களை உள்வாங்கி அவர்களுக்கு வருமானத்தினை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் இப் பண்ணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

விவசாயத்தினை மையமாகக் கொண்டு விலங்கு வளர்ப்பு, நாற்று மேடை, மரக்கறி உற்பத்தி போன்ற பல பண்ணைகள் முதல்வர் சரவணபவன் அவர்களின் செயற்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த முதல்வர் தி.சரவணபவன் அவர்கள் தற்போது காணப்படும் அசாதாரண சூழ்நிலையில் இருந்து மக்களை பாதுகாக்க சுய பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவது அவசியமாகும். சுய பொருளாதார ஊக்குவிப்பின் முன்னெடுப்புக்களில் ஒன்றாக "இளைஞர் பண்ணைகள்" ஆரம்பிக்கப்படுகின்றது என தெரிவித்தார்.


No comments: