News Just In

10/30/2026 01:41:00 PM

சிறுபான்மை சமூகங்களின் ஒற்றுமை அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு வழிவகுக்கும் : காரைதீவு உப தவிசாளர் இஸ்மாயில்

சிறுபான்மை சமூகங்களின் ஒற்றுமை அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு வழிவகுக்கும் : காரைதீவு உப தவிசாளர் இஸ்மாயில்


நூருல் ஹுதா உமர்

இலங்கையில் பெரும்பான்மை அரசியல் சக்திகளுக்கு மத்தியில் சிறுபான்மை சமூகங்கள் தமது உரிமைகளையும் அரசியல் அதிகாரத்தையும் உறுதிப்படுத்திக்கொள்வதற்கு சமூக ஒற்றுமை மிகவும் அவசியமானதாகும். அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள பல்வேறு உள்ளூராட்சி மன்றங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் இடையிலான அரசியல் புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன என காரைதீவு பிரதேச சபை உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயீல் தெரிவித்தார்.

காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் பாஸ்கரனின் ஏற்பாட்டிலும் தலைமையிலும், 2025ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் சாதனையாளர் கௌரவிப்பு விழா நேற்று (29) வியாழக்கிழமை காரைதீவு விபுலானந்தா கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்ட அரசியல் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் அதிதிகளாகக் கலந்துகொண்டமை மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இவ்வாறான நிகழ்வுகள் சமூகங்களுக்கிடையிலான நல்லுறவையும் புரிந்துணர்வையும் வலுப்படுத்துவதற்கு சிறந்த களமாக அமைகின்றன என்றார்.

காரைதீவு உள்ளிட்ட பிரதேசங்களில் காணப்படும் அரசியல் நிலைமைகள், சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன. பெரும்பான்மை அரசியல் சக்திகளுக்கு மத்தியில் சிறுபான்மை சமூகங்கள் ஒன்றிணைந்து செயற்படும்போது உள்ளூராட்சி நிர்வாகங்களிலும் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதற்கு இவை முன்னுதாரணங்களாகும்.

அதேபோன்று, கல்வித்துறையில் சாதனை படைக்கும் மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிப்பதும் மிகவும் முக்கியமானதாகும். ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றிபெறும் மாணவர்களை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதன் மூலம் அவர்களின் எதிர்காலக் கல்விப் பயணத்துக்கு உற்சாகமளிக்க முடியும்.

கல்வியாளர்களையும் அறிவாளிகளையும் உருவாக்கிய மண்ணாக இப்பிரதேசம் திகழ்கின்றது. அந்தப் பெருமையைத் தொடர்ந்து பாதுகாக்கும் வகையில் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கு அனைவரும் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன், கல்வி வளர்ச்சிக்கான ஊக்குவிப்புச் செய்திகளும் வழங்கப்பட்டன.

No comments: