News Just In

10/05/2026 03:01:00 PM

‘வெற்றி பயணம்’ திட்டத்துக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு: வழக்கு தள்ளுபடி

வெற்றி பயணம்’ திட்டத்துக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு: வழக்கு தள்ளுபடி




 தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் ‘வெற்றி பயணம்’ திட்டத்திற்கு தடை கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

அரசுப் பேருந்துகளில் தமிழகம் முழுவதும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் ‘வெற்றி பயணம்’ திட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள், வயதானவர்கள் உள்ளிட்டோர் பயன் பெறும் வகையில் செயல்படுத்தி வந்த விடியல் பயண திட்டம் விரிவுபடுத்தப்பட்டு ‘வெற்றி பயண திட்டம்’ என்ற பெயரில் அக்டோபர் 2-ம் தேதி தமிழக முதல்வர் விஜய் துவக்கி வைத்தார்.

இந்நிலையில், தவெக தலைமையில் ஆட்சி அமைந்த பின், தமிழகம் முழுவதும் இயங்கும் 12 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய வகை செய்யும், நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள வெற்றி பயண திட்டத்தை எதிர்த்து ஈரோட்டைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் கலாமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அதில், “வெற்றி பயண திட்டம் காரணமாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் வருவாய் இழப்பை சந்தித்து, தொழிலை கைவிட வேண்டிய சூழல் உருவாகும் எனவும், பெண் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்காமல் இருப்பது அரசியல் சட்டத்தின் சம உரிமையை மீறும் செயல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றி பயண திட்ட பயனாளிகளுக்கான கட்டணமாக, ஆண்டுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாயை அரசே ஏற்றுக் கொண்ட நிலையில், இதேபோல இழப்பீடு வழங்கி, தனியார் பேருந்துகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை அரசு ஏற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் முதல்வரின் அறிவிப்பு அடிப்படையில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் தொடர்பாக எந்த அரசாணையும் பிறப்பிக்கப்படவில்லை என்பதால், இந்த திட்டத்தை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும்” என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு முடியும் வரை, வெற்றி பயண திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பழனி, எந்த அரசாணையும் இல்லாமல் இந்த திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. அதனால், அரசாணை இந்த வழக்கில் முக்கியம் இல்லை என்பதால், அதை எதிர்த்து வழக்கு தொடரவில்லை” என தெரிவித்தார்.

No comments: