கரந்தெனிய சுத்தா, கொஸ்கொட சுஜீயின் நெருங்கியவர்களை கொலை செய்யத் திட்டம்

மஹஇந்துருவ, அகாடேகொட பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், அங்கிருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் வசிக்கும் கரந்தெனிய சுத்தா மற்றும் கொஸ்கொட சுஜீ ஆகியோரின் நெருங்கியவர்களான ஐவரை கொலை செய்யும் நோக்கில் அங்கு தங்கியிருந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கொஸ்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டில் தங்கியிருந்த மூன்று சந்தேக நபர்களில் இருவர், நேற்று முன்தினம் (03) இரவு பாணந்துறை வலான ஊழல் தடுப்புப் பிரிவினரும் கொஸ்கொட பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றைய சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.
இந்தக் கொலைத் திட்டம் வெலிசர கடற்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள விசேட தடுப்புக் காவல் அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான லத்துவாஹந்தி சுஜீவ ருவன் குமார டி சில்வா (36) எனப்படும் அஹுங்கல்ல லொகு பெற்றியினால் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த 1ஆம் திகதி அஹுங்கல்ல, வெலிகந்த பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கொலை செய்யப்பட்ட லொகு பெற்றியின் இளைய சகோதரரான லத்துவாஹந்தி சுகத் நுவன் குமார டி சில்வா (34) எனப்படும் பொடி பெற்றியின் கொலைக்கு பதிலடியாக இந்தக் கொலைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொடி பெற்றியின் இறுதிக் கிரியைகள் நேற்று (04) அளுத்கம, வெலிப்பன்ன பகுதியில் நடைபெற்றன. அதற்கு முன்னதாக குறித்த கொலைகளை மேற்கொள்வதே கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் திட்டமாக இருந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது
இந்தக் கொலைகளை மேற்கொள்வதற்காக சந்தேக நபர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் பணம் வழங்குவதற்கு லொகு பெற்றி உறுதியளித்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாம் தங்கியிருந்த வீட்டிலிருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள வீட்டில் வசிக்கும் ஐவரையும் கொலை செய்யுமாறு லொகு பெற்றி தமக்கு அறிவுறுத்தியதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் விசாரணைகளின்போது பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
கொலைகளை மேற்கொள்வதற்காக நடந்தே செல்லுமாறும் லொகு பெற்றி அறிவுறுத்தியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பொடி பெற்றியை கொலை செய்வதற்காக துப்பாக்கிதாரி நடந்தே சென்றிருந்ததால், இந்தக் கொலைகளுக்கும் நடந்தே செல்லுமாறு லொகு பெற்றி அறிவுறுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இலக்கு வைக்கப்பட்ட வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டி, கதவைத் திறக்கச் செய்து வீட்டில் இருப்பவர்கள் அனைவரையும் சுட்டுக் கொல்லுமாறும், கதவைத் திறக்காவிட்டால் தாங்கள் பொலிஸார் எனக் கூறி கதவைத் திறக்கச் செய்யுமாறும் லொகு பெற்றி சந்தேக நபர்களுக்கு அறிவுறுத்தியிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவ்வாறும் கதவைத் திறக்காவிட்டால் கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்துவதுடன், பின்னர் கைக்குண்டுத் தாக்குதலையும் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெலிசர கடற்படை முகாமின் விசேட தடுப்புக் காவல் அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள லொகு பெற்றி, சந்தேக நபர்களுடன் எவ்வாறு தொடர்பு கொண்டார் என்பது தொடர்பிலும் பொலிஸார் தனியான விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
“லொகு பெற்றியை நான் நீண்ட காலமாக அறிந்திருக்கிறேன். அவருடைய குரல் எனக்கு பரிச்சயமானது. அவர் எனக்கு தொலைபேசியில் அழைத்து அறிவுறுத்தல்களை வழங்கினார்” என கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவர் தெரிவித்துள்ளதாக வலான ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையிலேயே இந்த விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபர்களிடமிருந்து 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியொன்றும், அதற்குப் பயன்படுத்தப்படும் 8 தோட்டாக்களும், 6 தோட்டாக்கள் கொண்ட இரண்டு மெகசின்களும், ரிவோல்வர் ரக துப்பாக்கியொன்றும், அதற்குப் பயன்படுத்தப்படும் 6 தோட்டாக்கள் கொண்ட மெகசினொன்றும், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், போலி இலக்கத் தகடுகளுடன் கூடிய மோட்டார் சைக்கிளொன்றும் முச்சக்கரவண்டியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வலான ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரோஹான் ஒலுகல, கொஸ்கொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் யூ.ஏ. பியதுங்க உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
No comments: