News Just In

9/01/2026 07:12:00 AM

முன் பிள்ளைப் பருவக் கல்வியிலிருந்தே மாணவர்களின் ஆளுமையை மேம்படுத்துவது மிகவும் முக்கியமானது


முன் பிள்ளைப் பருவக் கல்வியிலிருந்தே மாணவர்களின் ஆளுமையை மேம்படுத்துவது மிகவும் முக்கியமானது


முன் பிள்ளைப் பருவக் கல்வியிலிருந்தே மாணவர்களின் ஆளுமையை மேம்படுத்துவது மிகவும் முக்கியமானது எனவும், அதற்கு வழிவகுக்கும் சாரணர் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் எனவும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.

2026.08.29 அன்று கொழும்பு சாரணர் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இலங்கையின் "சுபிபி சாரணர் பிரிவு” உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் முதன்முறையாக முன்பள்ளிக் கல்வி முறைமைக்கு சாரணர் இயக்கத்தை விரிவுபடுத்தும் நோக்கில் இப்புதிய சாரணர் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையின் முழுமையான கல்வி முறைமையையும் உள்ளடக்கும் வகையில் சாரணர் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு இலங்கை சாரணர் சங்கத்திற்கு கிடைக்கின்றது.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், முன் பிள்ளைப் பருவக் கல்வியிலிருந்தே மாணவர்களை மையமாகக் கொண்டதும், செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டதுமான கல்வி முறையை நோக்கி இலங்கையின் கல்வி முறைமையை வடிவமைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனக் குறிப்பிட்டார்.

அத்துடன், அண்மையில் வெளியிடப்பட்ட முன் பிள்ளைப் பருவக் கல்விக் கலைத்திட்டச் சட்டகம் மற்றும் ஆசிரியர் வழிகாட்டிக் கையேட்டிற்கு அமைவாக, அனைத்து முன்பள்ளிகளும் ஒரே முறையான கட்டமைப்பின் கீழ் ஒழுங்குபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

3 முதல் 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் ஆளுமை வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது மிகவும் அவசியமானது எனத் தெரிவித்த பிரதி அமைச்சர், சாரணர் இயக்கத்தை மேம்படுத்துவதில் இலங்கை சாரணர் சங்கம் மேற்கொள்ளும் பங்களிப்பையும் பாராட்டினார்.

இந்நிகழ்வில் இலங்கை சாரணர் சங்கத்தின் தலைவர் ரன்சிறி பெரேரா, இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதான சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி மனோஜ் நானாயக்கார உள்ளிட்ட சாரணர் சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் புதிதாக சாரணர் இயக்கத்தில் இணைந்த முன்பள்ளிப் பிள்ளைகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments: