News Just In

9/21/2026 08:27:00 AM

வலுவடையும் குறைந்த அழுத்தப் பிரதேசம் – நாட்டில் தொடரும் கனமழை!

வலுவடையும் குறைந்த அழுத்தப் பிரதேசம் – நாட்டில் தொடரும் கனமழை!



வங்காள விரிகுடாவில், அந்தமான் கடற்பரப்பை அண்மித்த பகுதிகளில் உருவாகியுள்ள குறைந்த தாழமுக்கம் அடுத்த சில நாட்களில் மேலும் வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், குறித்த குறைந்த அழுத்தப் பிரதேசத்தினால் இலங்கைக்கு நேரடியான தாக்கம் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, குறைந்த அழுத்தப் பிரதேசத்தை நோக்கி வீசும் காற்றின் தாக்கம் காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

குறித்த பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வடமத்திய மாகாணம் மற்றும் மன்னார் மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், அவற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

No comments: